ஜாதி ஒழிப்புக்கு முற்போக்கு சிந்தனையாளர்கள் ஒன்றிணைவோம் - கி.வீரமணி
நெல்லையில் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்களை நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்தது கண்டனத்திற்குரியது என திராவிட கழக தலைவர் கி.வீரமணி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி நகர் மணி மூர்த்தீஸ்வரம் தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் கடந்த 30ஆம் தேதி மாலை வேளையில் இரண்டு இளைஞர்கள் குளித்துவிட்டு வீடு திரும்பியபோது, அப்பகுதியில் மது அருந்தி, கஞ்சா போதையில் இருந்த கும்பல் ஒன்று இரண்டு இளைஞர்களையும் வழிமறித்துத் தாக்கியுள்ளது. அத்தோடு அவர்களின் ஜாதியைக் கேட்டவுடன் ஒடுக்கப்பட்ட பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் என்று தெரிந்ததும் இரண்டு பேரையும் கொடூரமாக, கையில் வைத்திருந்த ஆயுதங்களால் தாக்கியதுடன், அவர்களை நிர்வாணப்படுத்தி அவர்கள் மீது சிறுநீர் கழித்து இருப்பது அநாகரீகமானதும், கடும் கண்டனத்திற்குரியதும், வெட்கப்படத்தக்கதுமாகும்.
சுதந்திர நாட்டில்தான் வாழ்கிறோமா? நாம் நாகரிக உலகில், சுதந்திர நாட்டில் தான் வாழ்கிறோமா? ஜாதி என்னும் கொடூர நோய் மக்களை எப்படி மனிதத்தன்மையற்றவர்களாக ஆக்குகிறது என்பதை உணர வேண்டாமா? கேட்பதற்கே காது கூசும் இந்த அருவெறுப்பான செயலில் ஈடுபட்டோர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது வரவேற்கத்தக்கதாகும். அவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கைகளை உடனடியாகத் தொடர வேண்டும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்மாவட்டத்தில் நாங்குநேரிப் பகுதியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் தாக்கப்பட்ட கொடுமைக்குப் பின்னால் இருந்த ஜாதி வெறி, கடந்த ஆண்டு வேங்கைவயலில் நடந்த கொடுமை, தற்போது நடந்திருக்கும் தாக்குதல் போன்றவற்றைக் கவனத்தில் கொண்டு, தொடர்ந்து இத்தகைய நிகழ்வுகள் நடப்பதன் பின்னணி கண்டறியப்பட வேண்டும். ஜாதி-மத வெறியைத் தூண்டுவோர், வளர்க்க முயல்வோர், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவோர் யாரென்பது கண்டுபிடிக்கப்பட வேண்டும்.
🔘நெல்லையில் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்களை நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்தது கண்டனத்திற்குரியது!
— Asiriyar K.Veeramani (@AsiriyarKV) November 2, 2023
🔘 ஜாதி, மதக் கலவரங்களைத் தூண்டுவோர் - பின்னணியினர் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும்!
🔘 ஜாதி ஒழிப்புக்கு முற்போக்குச் சிந்தனையாளர்கள் ஒன்றிணைவோம்!…
ஜாதி, மதக் கலவரங்களைத் தூண்டுவோர் - பின்னணியினர் யார்? எப்படியேனும் ஜாதி - மதப் பிரச்சினைகளை, கலவரங்களைத் தூண்டிவிட வேண்டும் என்று கருதுவோர் இதன் பின்னணியில் செயல்பட வாய்ப்புண்டு. அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழ்நாட்டில் இத்தகைய பிரச்சினைகளைத் தூண்டுவதன் மூலம் தமிழ்நாடு திராவிட மாடல் அரசுக்குக் களங்கம் விளைவிக்கும் முயற்சி திட்டமிடப்பட்டு நடப்பதாகவே சந்தேகிக்க முடிகிறது. அப்படி உருவாக்கப்படும் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி அதையே விவாதப் பொருளாக்கவும் ஆளுநர் உள்பட ஒன்றியத்தை ஆளும் பாஜகவின் அத்தனை ஊதுகுழல்களும் தயாராக இருக்கின்றன.
ஜாதி ஒழிப்புக்கு முற்போக்குச் சக்திகள் ஒன்றிணைய வேண்டும்! ஜாதிப் பிரச்சினைகள் எங்கு நடந்தாலும், அதற்கு உரிய சட்டப்படியான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டு வருவது பாராட்டத்தக்கது. அதே வேளையில் சரியான பரப்புரை, விழிப்புணர்வூட்டல் ஆகியவற்றைச் செய்து, ஜாதி நோயிலிருந்து மக்களை மீட்கவேண்டியதும் அவசர அவசியமாகும். அதற்கு அனைத்து முற்போக்கு இயக்கங்களும், சமூகநீதி உணர்வாளர்களும் ஓரணியில் திரண்டு செயலாற்ற வேண்டும்; அதற்கு அரசு இயந்திரத்தின் அங்கங்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும். மதவாதம், ஜாதி வெறியிலிருந்து மக்களைக் காக்க அதுவே நெடுங்காலத் தீர்வாகும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.