பாராட்டுவோருக்கும், எதிர்ப்போருக்கும் நன்றி! - கி.வீரமணி அறிக்கை

 
k veeramani

தசைகால் விருதை தனக்கு அளித்து பெருமைப்படுத்திய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குறிப்பிட்டுள்ளார். 
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டாடப்பட்ட விடுதலை நாள் விழாவில் ‘திராவிட மாடல்’ அரசின் ஒப்பற்ற முதலமைச்சர் - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு அரசின் இவ்வாண்டுக்குரிய ‘தகைசால் தமிழர்’ விருதினை எனக்கு அளித்துப் பெருமைப்படுத்தியுள்ளார்கள். எனது உளப்பூர்வமான, தலைதாழ்ந்த வணக்கத்தையும், நன்றிகளையும் - தமிழ்நாடு அரசுக்கும், அதன் ஆற்றல்  -ஆளுமை மிகு முதலமைச்சருக்கும் உரித்தாக்குகிறேன். ஊடக நண்பர்கள், விருது தொடர்பாக எனது உணர்வுபற்றி கேள்வி கேட்டபோது சொன்ன பதிலில், ‘‘இவ்விருது என்பது எனக்கு -  என் பெயருக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், உண்மையில் அது தந்தை பெரியாருக்கும், அவர்தம் லட்சியப் பயணத்தில் களம் கண்ட - காணும் எண்ணற்ற தொண்டர்களுக்கும், தோழர்களுக்கும் அளிக்கப்பட்ட விருதாகவே நான் கருதி, எனது லட்சியப் பயணத்தை மேலும் உறுதியுடனும், உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும், இந்த நம்பிக்கையை நியாயப்படுத்திடும் உழைப்பை, நாணயத்துடன் என்னால் முடியும் வரை செய்வேன்’’ என்று கூறினேன்.


சனாதன மயக்க மருந்தை நமது ‘மண்டூகங்க’ளுக்குத் தந்து, தாயின் மடியையே அறுக்கக் கூலிப் பட்டாளங்களாக்க முயற்சிப்பார்களா?
சிறப்போடு நடைபெறும் ‘திராவிட மாடல்’ ஆட்சியை, தொடராமல் செய்ய எத்தனை எத்தனை தடைகளும், இடர்களும்! என்றாலும், அதை அரசு தாண்டும்; திராவிடம் வெல்லும் - பழைய புராணக் கதைகளின் முடிவும், இன்றைய திராவிடத்தில் தலைகீழாக மாறும் என்பது உறுதி! காரணம், எங்களைப் பிணைத்திருப்பது பதவி ஆசை பவிசு அல்ல; மாறாக கொள்கை! கொள்கை!! கொள்கை!!! வீழ்த்த நினைத்தவர்கள் வீழ்ந்துபோகும் வீர வரலாற்றை உருவாக்க,  நம்மினம் வீறுகொண்டு எழப் போராடி, விழுப்புண்கள் பெற என்றும் தயார் நிலையில் இருப்பவர்களுக்கு அளிக்கப்படும் விருது - இராணுவப் படைத் தளகர்த்தர்களுக்கான வீரதீர விருதுகள் (Gallantry Awards) போன்றவைதான் இவ்விருதுகள் என்று கருதி மேலும் நாளும் உழைப்போம்.

விருது அறிவிப்பு கேட்டு  மகிழ்ச்சியுடன் பாராட்டு - வாழ்த்துத் தெரிவித்த பல்துறையைச் சார்ந்த வர்களுக்கும், எரிச்சல் கொண்டு, ஏகடியம் பேசி தங்களது ‘தனித்தன்மையை’ வெளிப்படுத்திய வசவாளர்களுக்கும் என்று நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொள்கை எதிரிகள் நம்மைப் பாராட்டினால்தான் நாம் யோசிக்கவேண்டும். காரணம், ‘‘எங்கோ சறுக்கல், வழுக்கல் வந்துவிட்டதோ நமக்கு, அதனால்தான் எதிரியின் பாராட்டு மாலை நம் கழுத்தில் விழுகிறதோ’’ என்று மனதைக் குடைந்து கொள்ளவேண்டியிருக்கும்! அதற்கு அவசியமின்றி, வழக்கமான வசவுகள் வரவுகளாகும்போதும், நமது உறவுகள் யார்? பகைப்புலம் எவர்? என்று புரிந்து, களமாடி கடமையாற்றிட, எளிதில் நமக்குப் பாதை தெளிவாகத் தெரிகிறதல்லவா - அதைவிட நமக்கு நல்வாய்ப்பு வேறு ஏது தோழர்களே! நமது ஈரோட்டுப் பாதை நன்கு நம் பயணங்களாகட்டும்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.