கலைஞர் நினைவக திறப்பு விழா மிக மிக சிறப்பாக அமைந்திட வாழ்த்துகள் - செல்வப்பெருந்தகை

 
tn

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவைப் போற்றுகிற வகையில் நினைவகம் அமைத்திருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

tn

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், எம்எல்ஏவுமான செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழகத்தின் முதுபெரும் தலைவர், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவகத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் இன்று மாலை திறந்து வைக்க இருக்கிறார். தமிழ்நாட்டு வரலாற்றில் 19 ஆண்டுகாலம் முதலமைச்சராக இருந்து தமிழ்நாட்டை வளப்படுத்தி, தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, இந்திய அரசியலில் எழுச்சியை ஏற்படுத்திய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவைப் போற்றுகிற வகையில் நினைவகம் அமைத்திருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது.

selva perunthagai

இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் அழைப்பை ஏற்று நானும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. எஸ். ராஜேஷ்குமார் அவர்களும் உடனடியாக தலைநகர் தில்லிக்கு செல்ல வேண்டியிருக்கிறது. எனவே, கலைஞர் நினைவகத் திறப்பு விழாவில் பங்கேற்க இயலாத நிலை உள்ளதால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள்  திரு. கே.வீ. தங்கபாலு, திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன், எம்.எல்.ஏ., திரு. சு. திருநாவுக்கரசர், எம்.பி., திரு. எம். கிருஷ்ணசாமி மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் திரு. சா. பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக பங்கெடுத்துக் கொள்வார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கலைஞர் நினைவக திறப்பு விழா மிக மிக சிறப்பாக அமைந்திட தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகிறேன்என்று குறிப்பிட்டுள்ளார்.