கலாஷேத்ரா இயக்குநர் மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜர்!

 
 Kalashetra

மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரம் தொடர்பாக கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜராகியுள்ளார். 

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் பலருக்கும் பேராசிரியர்கள்  பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.  மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர்  மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,  மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து கலாஷேத்ரா கல்லூரிக்கு வரும் 6ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக,  மாணவிகளிடம் மகளிர் ஆணையத்தின் தலைவர் குமாரி நேரில் விசாரணை நடத்தினார். புகாரின் பேரில் பேராசிரியர் ஹரி பத்மன் மீது அடையாறு மகளிர் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பேராசிரியர் ஹரி பத்மனை கைது செய்ய போலீசார் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், உதவி பேராசிரியர் ஹரி பத்மன் திடீரென தலைமறைவாகினார். இந்நிலையில் தற்போது பேராசிரியர் ஹரிபத்மனை போலீஸார் சென்னையில் வைத்து கைது செய்தனர். 
 
இந்த நிலையில் மாணவிகளின் பாலியல் புகார் தொடர்பாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் இன்று நேரில் ஆஜராகியுள்ளார். ரேவதி ராமச்சந்திரனிடம் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி விசாரணை நடத்தி வருகிறார். மாணவிகளின் பாலியல் புகார் தொடர்பாக கலாஷேத்ரா இயக்குநர் விளக்கம் அளித்து வருகிறார். புகார் குறித்த விளக்கம் முழுமையாக முடிந்த பின்னர் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.