மே 12ல் வைகையாற்றில் இறங்குகிறார் கள்ளழகர்

 
மதுரை கள்ளழகர் திருக்கோயில்

மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவானது அடுத்த மாதம் எட்டாம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி 12-ஆம் தேதி அதிகாலை 05.45 முதல் 06.05மணிக்குள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

கள்ளழகர் விழாவுக்கு அனுமதி வழங்க முடியாது : நீதிமன்றம் கெடுபிடி!

அழகர்கோவில் நிர்வாகம் சார்பில் செயல் அலுவலரும் உதவி ஆணையருமான திரு. யக்குநாராயணன் அவர்கள் இன்று செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் கோவிலின் சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் 8.5.2025 அன்று மாலை தொடங்கி, தொடர்ந்து 17.05.2025 அன்று உற்சவ சாந்தி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறும் எனவும், விழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி 12-ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வுக்காக பத்தாம் தேதி மாலை கண்டாங்கி பட்டுடுத்தி தங்க பல்லக்கில் கள்ளர் வேடம் பூண்டு சுந்தரராஜ பெருமாள் மதுரைக்கு புறப்படுவார் என்றும்  அப்பன் திருப்பதி கள்ளந்திரி கடச்சனேந்தல் வழியாக வரும் அழகருக்கு 11ஆம் தேதி மூன்று மாவடி தல்லாகுளம்ஆகிய இடங்களில் எதிர்சேவை நிகழ்ச்சியை தொடர்ந்து பன்னிரண்டாம் தேதி அதிகாலை 05.45மணி முதல் 6.05மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 12ஆம் தேதி இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் அருள் பாலிக்கும் பெருமாள், 13 ஆம் தேதி தேனூர் மண்டபடியில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் தரும் நிகழ்வு நிகழ்ச்சி நடைபெறும் எனவும், அன்று இரவு ராமராயர் மண்டபடியில் தசாவதாரம் நிகழ்ச்சியும், 14ஆம் தேதி இரவு மன்னர் சேதுபதி ராஜா மண்டபம் முன்பு பூப்பல்லாக்கு நிகழ்ச்சியும் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ள கோவில் நிர்வாகம், 15ந் தேதி அதிகாலை மதுரையில் இருந்து புறப்பட்டு அப்பன் திருப்பதி கள்ளந்திரி பொய்க்கைகரைப்பட்டி வழியாக 16ஆம் தேதி காலை தன் இருப்பிடமான அழகர் கோவிலை வந்தடைவார் எனவும், 17ஆம் தேதி உற்சவர் சாந்தி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு வரும் எனவும் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.