ஒரு கிலோ செயினை திருமாவளவனுக்கு பரிசளித்த கமல்ஹாசன்

 
k k

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனின் 63 வது பிறந்தநாள் நாள்  விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை உறுப்பினரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமலஹாசன் கலந்து கொண்டு பாடலுடன் சிறப்புறையாற்றினார். அப்போது பிறந்தநாள் நிகழ்ச்சியில் தங்க முலாம் பூசப்பட்ட ஒரு கிலோ வெள்ளி செயினை பரிசாக கமல்ஹாசன் அவருக்கு அணிவித்தார்.

நிகழ்ச்சியில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் எம்.பி.பேசுகையில், “திருமாவளவனின் 40 ஆண்டு அரசியல் பயணம் சாதாரணமல்ல. யார் எந்த வண்ணத்தில் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, அதைப்போல பெரும்பான்மையை மதிக்காதவர்களை சாடுவது நமது கடமை. அண்ணா ஒருமுறை கூறியது போல, ‘தேசிய பறவை மயில் என்றாலும், எண்ணிக்கையில் காக்கை தான் அதிகம்’. முத்தமிழறிஞர் கலைஞர்  திருமாவளவனை ‘அம்பேத்கர் படையின் ஜெனரல்’ என அழைத்தார். இந்தியாவின் மிகப்பெரிய பலவீனம் சாதி பிரிவினை.சாதி பிரிவினையை  விட்டுவிட்டால்தான் நாம் ஒரே மக்களாகவும் ஒரே தேசமாகவும் வாழ முடியும். ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல் வழியாக முன்னேற்றுவது எளிதல்ல; அதைச் செய்பவர்கள் அனைவரும் அற்புதமானவர்கள்.

இது ஓட்டுக்காக நடத்தப்படும் அரசியல் அல்ல. 2000 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் இது. ஒரு கட்சியை அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற்றுவது எவ்வளவு கடினம் என்று  எனக்கு தெரியும்; ஏனெனில் நானும் ஒரு கட்சி ஆரம்பித்துள்ளேன். என் தொழில் சினிமா என்றாலும், அரசியலில் எனது முதல் எதிரி சாதிதான். பிறப்பால் யாரும் தாழ்ந்தவர்கள் அல்ல. பெண்களின் முன்னேற்றம் மூலமே சமூக முன்னேற்றம் சாத்தியம். எல்லா கட்சியையும் ‘என் கட்சி’ என்று எண்ணினால் அதுவே இந்தியா.தமிழ்நாட்டுக்கு வெளியில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் உதாரணமாக உள்ளது. அந்த நம்பிக்கை இன்னும் பலப்பட வேண்டும். திருமாவளவன் உருவெடுத்த பிறகே ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு உரிமை கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவானது.சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்காக பிரச்சாரம் செய்யும்போது, காவல் அதிகாரிகள் மற்றும் வயது முதிர்ந்த பெண்கள் உணர்ச்சியுடன் வரவேற்றதை பார்த்தேன். அவருக்கு தோள் கொடுப்பதில் நான் எப்போதும் தயாராக உள்ளேன்.

இந்தியாவை பல்லாக்கு போல தூக்கிச் செல்ல நான் தயார். சிந்து முதல் வைகை,வரை மெலடி முதல் கீழடி வரை திராவிடம் தான்” என கமல்ஹாசன் தெரிவித்தார்.மகளிர் உரிமைத்தொகை வழங்குவது இங்குதான் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது மற்ற மாநிலங்களில் அது நடந்து வருகிறது.எல்லாவற்றையும் சேர்த்துக் கொள்வதற்கான பெருந்தன்மையின் பெயர் தான் திராவிடம். அது நம் நாடு தழுவியது” என்றார்.