ஆஸ்கர் குழுவில் கமல்ஹாசன் தேர்வு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!
ஆஸ்கர் விருதுக்கான குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ள கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2026ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதி ஆஸ்கர் அகாடமி விருதுகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது. முன்னதாக ஜன. 12 முதல் 16 வரை விருது பரிந்துரைகளுக்கான வாக்களிப்பு நடைபெறுகிறது. ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் இதர பரிந்துரைகள் ஜன. 22-ல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இந்நிலையில், விருதுக்கான தேர்வுக்குழுவில் இடம்பெறுவதற்கு உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ஆஸ்கர் விருது குழு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் இந்தியாவில் இருந்து இந்தி நடிகர் ஆயுஷ்மன் குராணா, ‘காஸ்டிங்’ இயக்குநர் கரண் மாலி, ஒளிப்பதிவாளர் ரனபீர் தாஸ், ஆடை வடிவமைப்பாளர் மாக்ஸிமா பாசு, ஆவணப்பட இயக்குநர் ஸ்மிருதி முந்த்ரா, இயக்குநர் பாயல் கபாடியா ஆகியோருக்கும் ஆஸ்கர் குழு அழைப்பு விடுத்திருக்கிறது.

இதேபோல் உலகளவில் 534 திரைக் கலைஞர்களுக்கு ஆஸ்கர் குழு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி இவர்கள் அனைவரும் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டால் ஆஸ்கர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 11,120 ஆகவும் , அதில் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை 10,143-ஆகவும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
உலக அளவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்கர் அகாடமி குழுவில் உறுப்பினராக இணைவதற்கு அழைப்பு விடுக்கப்படுவது திரைத்துறையில் கௌரவமாக கருதப்படுகிறது. அந்தவகையில் ஆஸ்கர் குழுவில் இணையவுள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் - கலைஞானி திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு என் வாழ்த்துகள்!
மொழி - தேச எல்லைகளைக் கடந்து திரைத்துறையினர் மீது தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான தாமதமான அங்கீகாரமே இது. இன்னும் பல தேடி வரும் உயரம் தங்களுடையது!” என்று குறிப்பிட்டுள்ளார். ‘


