"பொது நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்றது குறித்து விளக்கம் கேட்கப்படும்" - ராதாகிருஷ்ணன் பேட்டி!

 
radhakrishnan

கொரோனாவிலிருந்து மீண்ட உடனேயே பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து  கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

bigboss 5 kamal

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் அண்மையில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில் கடந்த 21ம் தேதி சென்னை திரும்பினார்.  இதையடுத்து அவருக்கு லேசான இருமல் இருந்த காரணத்தினால் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதனால் சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த 22ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து கடந்த 1ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன கமல்ஹாசன் 3ஆம் தேதி வரை ஓய்வில் ,  தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் 4ஆம் தேதி முதல் அவர் தனது அன்றாடப் பணிகளைத் துவங்கலாம் எனவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. இதனால் கடந்த 4ஆம் தேதி  விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் வழக்கம்போல் தொகுத்து வழங்கினார்.

Radhakrishnan

கொரோனா தொற்றில் இருந்து மீண்ட கமல் ஹாசன் தனிமைப்படுத்துதல் இல்லாமல் பொது நிகழ்ச்சியில் உடனடியாக கலந்து கொண்டது சர்ச்சையை கிளப்பியது.  இந்நிலையில் சென்னை ஓமந்தூரார்  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட ஒமிக்ரான் தொற்று சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,  கொரனோ உறுதி செய்யப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில்  ஈடுபடாமல் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல் ஹாசனிடம் அதுகுறித்து விளக்கம் கேட்கப்படும். அத்துடன் பொதுவாக கொரோனா  உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனையில் 7 நாட்களும்,  அதன் பின் ஏழு நாட்கள் வீட்டில் என மொத்தம் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.