‘பாலு அண்ணாவின் ரசிகர்களில் ஒருவனாக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி’ - கமல்ஹாசன்

 
kamal with spb

 நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவிற்கு 'எஸ்.பி. பாலசுப்ரமணியம்' சாலை என பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.  

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்ந்த  நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவிற்கு 'எஸ்.பி. பாலசுப்ரமணியம்' சாலை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என எஸ்.பி.பியின் மகனும், பாடகருமான எஸ்.பி.பி.சரண் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பாக நேற்று முன்தினம் செப்.24ம் தேதி முதலமைச்சர் அலுவலகத்தில் மனு அளித்தார். 

SPB

இதனை ஏற்று எஸ்.பி.பி அவர்கள் தமிழ்த் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும், அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவிற்கு, “எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை" எனப் பெயரிடப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.  இதற்கு எஸ்.பி.பி.சரண் நன்றி தெரிவித்திருந்தார்.  

kamal

இந்நிலையில் பன்முக திரைக்கலைஞரும், அரசியல் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், “ஒப்பற்ற இசைக் கலைஞரும் எனது மூத்த சகோதரருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம்  அவர்களின் பெயரை, சென்னையில் அவர் வாழ்ந்த தெருவிற்குச் சூட்டி அறிவித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள். லட்சக்கணக்கான கலை ஆர்வலர்களின்  மனதில் இன்றும் வாழும் ஒரு பெரும் கலைஞனுக்குச் செய்யப்பட்டு இருக்கும் மரியாதை இது. பாலு அண்ணாவின் ரசிகர் கூட்டத்தில் ஒருவனாக என் பாராட்டுகளும் நன்றியறிதல்களும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு உரித்தாகட்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.