வீரத்தையும், தியாகத்தையும் வளர்த்துக்கொள்வோம்..- கமல்ஹாசன் வாழ்த்து..

 
kamal

 
75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் என் மனப்பூர்வமான சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  

75வது சுதந்திர தினம்

 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “25 ஆண்டுகளுக்கு முன்னர் மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்க விழாவில், பிரிட்டிஷ் மகாராணி முன்னிலையில் படமாக்கப்பட்ட காட்சியில், "ஒரு கடலையோ காற்றையோ, காட்டையோ குத்தகைக்கோ, வாடகைக்கோ, சொந்தம் கொண்டாடவோ முடியும் எனும் எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது? இந்த மரத்தின் வயது இருக்குமா உங்களுக்கு? யார் நீங்கள்? இது என் நாடு, என் தகப்பனின் சாம்பலின் மீது நான் நடக்கிறேன். நாளை என் சாம்பலின் மீது என் மகன் நடப்பான்" எனும் வசனத்தைப் பேசினேன். இது சினிமாவிற்காக எழுதிய வசனம் அல்ல. என் உள்ளத்தில் இருந்த தீ. அன்னியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த தாய் நிலத்தை மீட்க களம் இறங்கிய ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இருந்த தீ.

வீரத்தையும், தியாகத்தையும் வளர்த்துக்கொள்வோம்..-  கமல்ஹாசன் வாழ்த்து..

என் உளத்தீ இன்னமும் அணையவில்லை . உங்களிடமும் இருக்கும் இந்தத் தீ நீடிக்கும் வரை, நம் வீடும் நாடும் மாநிலமும் ஊரும் தெருவும் சீராகும். தியாக மறவர்கள் பலர் தங்கள் இன்னுயிரை, சொந்த வாழ்க்கையை, சொத்து சுகங்களை இழந்து பன்னெடுங்காலம் போராடி பெற்றது இந்தச் சுதந்திரம் என்பது நம் வரலாறு, வரலாற்றை மறந்து விட்டால், மீண்டும் அதே நாட்களுக்குத் திரும்ப வேண்டியிருக்கும் என்பதும் வரலாறு, மறவோம் மறவோம் என்று இந்த நாளில் உறுதி கொள்வோம். தாயகம் காக்க தன்னலம் துறந்த அன்றைய சுதந்திரப் போராட்ட வீரர்களையும், இன்றைய நாளை நாம் இனிதே கொண்டாட எல்லைகளைக் காக்கும் முப்படை வீரர்களையும் நன்றியோடு நினைவுகூர்வோம். இவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம். வீரமும் தியாகமும் யாவர்க்கும் உரியவை. வளர்த்துக்கொள்வோம்.”என்று குறிப்பிட்டுள்ளார்.