ஓபிஎஸ் அணியில் அதிரடி- காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக விலகல்
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக உரிமை மீட்புக் குழுவில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் ஆ.வீ. இரஞ்சித் குமார் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக விலகுவதாக அறிவித்துள்ளனர்.
கட்சி ரீதியாக எடுக்கப்படும் கூட்டணி முடிவுகளில் ஓ. பன்னீர்செல்வம் காட்டி வரும் தாமதமே இந்த அதிருப்திக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மொத்தமுள்ள 88 மாவட்டச் செயலாளர்களில் 77 பேர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கலாம் என்று விருப்பம் தெரிவித்தும், தலைமை இதுவரை எந்த முன்னேற்றமும் எடுக்காதது நிர்வாகிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்த இரஞ்சித் குமார், ஓ.பி.எஸ் மீது தங்களுக்குத் தனிப்பட்ட முறையில் எந்தக் கோபமும் இல்லை என்றும், காஞ்சிபுரத்தில் தங்களுக்கு இருக்கும் பலமான கட்டமைப்பை அவரிடம் விளக்கிவிட்டுத்தான் முறைப்படி பிரிந்து வந்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், வரும் 19-ஆம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் அவர் ஒரு பரபரப்புத் தகவலைப் பகிர்ந்துள்ளார். ஏற்கனவே ஓ.பி.எஸ் அணியில் இருந்து நிர்வாகிகள் வெளியேறி வரும் சூழலில், ஒரு மாவட்ட நிர்வாகமே கூண்டோடு விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

