“வைக்கம் போராட்டம்” நூலின் கன்னட மொழிபெயர்ப்பினை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

 
tgb

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  எழுத்தாளர் பழ. அதியமான் அவர்கள் எழுதிய “வைக்கம் போராட்டம்” நூலின் கன்னட மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (29.11.2023) தலைமைச் செயலகத்தில், எழுத்தாளர் திரு. பழ. அதியமான் அவர்கள் எழுதிய "வைக்கம் போராட்டம்" நூலின் கன்னட மொழிபெயர்ப்பு நூலினை வெளியிட, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் திரு. கி. வீரமணி அவர்கள் பெற்றுக் கொண்டார். கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்திலுள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்ததை நீக்கக் கோரி நடந்த வைக்கம் போராட்டத்தில் கேரளத் தலைவர்களின் அழைப்பின் பேரில் தந்தைப் பெரியார் அவர்கள் வைக்கம் சென்று, அந்தப் போராட்டத்திற்கு தலைமை ஏற்றார். பின்பு பல நாட்கள் அங்கு தங்கியிருந்து போராட்டத்தை ஒருங்கிணைத்து, அனைத்து மக்களிடமும் வைக்கம் போராட்டம் குறித்து தமது சீர்திருத்த, சமூக நீதிக் கருத்துக்கள் மூலம் பிரச்சாரம் செய்து, வைக்கம் போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 1923 மார்ச் மாதம் தொடங்கிய வைக்கம் போராட்டம் நடைபெற்று நூறு ஆண்டுகள் ஆகின்றது.

stalin

"வைக்கம் போராட்டம் தொடங்கி நூறாண்டுகள் நிறைவு செய்ததையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் 2023ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் நாள் தொடங்கி ஓராண்டு காலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்" என்றும், போராட்டத்தின் வரலாற்றையும், வெற்றியையும் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுடன் சேர்ந்து கொண்டாடும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 30.3.2023 அன்று விதி 110-60T கீழ் 11 அறிவிப்புகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 1 -ஆம் நாள் கேரளாவில் உள்ள வைக்கத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு கேரளா மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் ஆகியோர் கலந்து கொண்ட வைக்கம் சத்தியாகிரகபோராட்டத்தின் நூற்றாண்டு விழாவில், எழுத்தாளர் திரு.பழ.அதியமான் அவர்கள் எழுதிய வைக்கம் போராட்டம் நூலின் மலையா மொழிப்பெயர்ப்பு வெளியிடப்பட்டது. இன்றைய தினமான நவம்பர் 29-ம் நாள், 1925 ஆம் ஆண்டு வைக்கம் போராட்டத்தின் வெற்றிவிழா வைக்கத்தில் கொண்டாடப்பட்ட நாளாகும். அந்த விழாவிற்கு தந்தை பெரியார் அவர்கள் தலைமையேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

stalin

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நாளினை நினைவு கூரும் வகையில் இன்றையதினம் எழுத்தாளர் திரு.பழ.அதியமான் அவர்கள் எழுதிய வைக்கம் போராட்டம் நூலின் கன்னட மொழிபெயர்ப்பு நூலை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் திரு. கி. வீரமணி அவர்கள் பெற்றுக்கொண்டார். பேராசிரியர் ஸ்ரீதரா மேற்பார்வையில் திரு. செல்வகுமார் இந்நூலினை மொழிபெயர்த்துள்ளார். கௌரி மீடியா டிரஸ்ட் நிறுவனத்தோடு இணைந்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.