காணும் பொங்கல்- கோயம்பேடு காய்கறி வணிக வளாகங்களுக்கு நாளை விடுமுறை
பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான, “காணும் பொங்கல்” கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள காய்கறி வணிக வளாகங்களுக்கு மட்டும் நாளை (ஜன.17) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு நாட்கள் கொண்டாடுவது வழக்கம். பொங்கலுக்கு முந்தைய நாளும், மார்கழி மாதத்தின் கடைசி நாளும் “போகி” பண்டிகை கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல்நாள் தைப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அந்த நல்ல நாளில் சூரிய பகவானுக்கு, விவசாயிகள் பொங்கலிட்டு வழிபாடு நடத்திக் கொண்டாடுகின்றனர். இரண்டாவது நாளில் தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையின் கடைசி நாள் காணும் பொங்கல். காணும் பொங்கலை கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர்களை சந்தித்து ஆசி பெறுதல் உள்ளிட்டவை இதில் அடங்கும். காணும் பொங்கல் எதற்காக கொண்டாடுகிறோம்? எப்படி கொண்டாட வேண்டும்? என பல கதைகள் இருந்தாலும், அந்த வழிமுறைகள் அனைத்தும் மாறி, தற்போது அனைவரும் குடும்பத்துடன் பல இடங்களை காணச் செல்கின்றனர். குடும்பத்தினருடன் வீட்டில் சமைத்த உணவை எடுத்துக் கொண்டு தங்களுக்குப் பிடித்த இடத்திற்குச் செல்வது வழக்கம். இந்நிலையில் பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான, “காணும் பொங்கல்” கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள காய்கறி வணிக வளாகங்களுக்கு மட்டும் நாளை (ஜன.17) விடுமுறை விடப்படுவதாக கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் நலச் சங்கம் அறிவித்துள்ளது.