3வது நாளாக கன்னியாகுமரி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை

 
Fishermen

கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மூன்றாவது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. 

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர புயல் "பிப்பர்ஜாய்" இன்று (09.06.2023) காலை 08:30 மணி அளவில் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, கோவாவில் இருந்து மேற்கே சுமார் கிலோமீட்டர் தொலைவில், மும்பையில் இருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 820 கிலோமீட்டர் தொலைவில், போர்பந்தரில் (குஜராத்) இருந்து தென்-தென்மேற்கே சுமார் 830 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று, அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு-வடகிழக்கு திசையிலும் அதன் பிறகு, அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையிலும் அடுத்த மூன்று தினங்களில் நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. புயல் காரணமாக தமிழக கடலோர பகுதிகள் மிகுந்த சீற்றத்துடன் காணப்படுகின்றன. 

இந்நிலையில், கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மூன்றாவது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.  கடந்த 1-ந் தேதி முதல் அடுத்த மாதம் 31-ந் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் விசைப்படகுகள் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் வள்ளங்கள், கட்டுமரங்கள் வழக்கம்போல் மீன்பிடித்து வந்தன. இந்த நிலையில், புயல் காரணமாக கடல் சீற்றமாக காணப்பட்டது. கடல் சீற்றம் காரணமாக 3வதுநாளாக கன்னியாகுமரி நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. குளச்சல், முட்டம், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரம் நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன.