கர்நாடகா தேர்தல்: காங்கிரஸ் வெற்றிக்கு பாடுபட வேண்டும் - துரைமுருகன் வேண்டுகோள்..

 
துரைமுருகன்

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும்  காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று கர்நாடக மாநில அனைத்து அமைப்புகளுக்கும் திமுக  பொதுச்செயலாளர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் வருகிற 10ம் தேதி நடைபெற உள்ளது. அங்கு பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலையொட்டி பரப்புரை களம் அனல் பறக்கிறது.  பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என தேசிய தலைவர்கள் பலரும் கர்நாடகாவில் சூறாவளி பரப்புரை மேற்கொண்டுள்ளனர். கர்நாடகா தேர்தலில் பாஜக கூட்டணியில் , அதிமுக போட்டியிடுகிறது. அதேபோல், காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தற்போது திமுக ஆதரவு தெரிவித்திருக்கிறது.  

கர்நாடகா தேர்தல்: காங்கிரஸ் வெற்றிக்கு பாடுபட வேண்டும் - துரைமுருகன் வேண்டுகோள்..

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “ வருகிற மே-10 2023 அன்று கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டுமெனவும், கர்நாடக மாநிலக் கழக அமைப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் தேர்தல் பணிக்குழு அமைத்து, கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தல் பணியாற்றி,  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய  வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.