கார்த்தி சிதம்பரம் எம்.பி., உள்பட 124 பேர் சென்ற விமானம்.. நடு வானில் பழுதானதால் பரபரப்பு..
சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், திடீர் இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறங்கியது. விமானத்தில் இருந்த கார்த்திக் சிதம்பரம் எம்.பி., உள்பட 124 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று மதுரைக்கு புறப்பட்டுச் சென்றது. 117 பயணிகள், 7 விமான ஊழியர்கள் என 124 பேர் இந்த விமானத்தில் பயணம் செய்துள்ளனர். அதில் ஒருவராக காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரமும் மதுரைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதற்கான அபாய எச்சரிக்கை சிக்னல் வந்துள்ளது. இதனையடுத்து விமான நிலைய கட்டுப்பாட்டகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீண்டும் சென்னைக்கே திருப்பிவிடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பின்னர் பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து அவசரமாக கீழே இறக்கப்பட்டு, விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். விமானத்தை பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. அதோடு பயணிகள் அனைவரையும் மாற்று விமானம் மூலம் மதுரைக்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விமானத்திலிருந்த காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் உட்பட 124 பேர் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.