கட்சி அறிவிப்பது பெரிய விஷயம் இல்லை... விஜய்க்கு பட்டால் தான் புரியும்- கார்த்தி சிதம்பரம்
கட்சியை அறிவிப்பது பெரிய விஷயம் கிடையாது, நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், “கட்சியை அறிவிப்பது பெரிய விஷயம் கிடையாது, நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும், தனியா கட்சி நடத்துவது என்ன என்பது பாட்டால் தான் தெரியும், விஜயும் பட்டு தெரிந்து கொள்வார். நீட் GST உள்ளிட்ட விவகாரங்களில் நடிகர் விஜயின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும், எல்லோரிடமும் தான் தமிழ் பற்று தேச பற்று உள்ளது, எனக்கும் தான் தேசிய பற்று உள்ளது, அவரது கொள்கை என்ன என்பதை விவரிக்க வேண்டும், விஜய் தனது கொடியை அறிமுகப்படுத்திவைத்தது குறித்து நான் எந்த கருத்தும் கூற முடியாது.
முதலமைச்சரின் நிவாரண நிதி பாகுபாடின்றி அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும், உயிர் இழப்புகள் ஏற்படும் போது அனைவருக்கும் ஒரே மாதிரியான இழப்பீடு தொகையினை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்பதே எனது கருத்து.பாலியல் குற்றங்களை அரசு தடுக்க முடியாது, நடந்த பிறகு விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை தான் பெற்றுக் கொடுக்க முடியும். இதற்கு சமுதாய மாற்றம் அவசியமாக உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்” என்றார்.