விஜய், ராகுல் உடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை- கார்த்தி சிதம்பரம்
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம், “விஜய் பிரபலமான நடிகர் தான். அதனால் அனைவருக்கும் அறிமுகமானவர்தான். காங்கிரஸ் கட்சியோடு எந்த ஒரு உறவும் இதற்கு முன்பு இருந்தது கிடையாது. ஏற்கனவே விஜய் ஒரு காலகட்டத்தில் இளைஞர் காங்கிரஸில் செயல்பட வேண்டும் என்று விருப்பப்பட்டதாகவும் அதற்காக சந்திப்பு நடந்ததாகவும் நான் கேள்விபட்டுள்ளேன். அவ்வளவுதான், ஆனால் காங்கிரசுக்கும் அவருக்கும் எந்தவித உறவும் இல்லை. தவெக உள்ளிட்ட எந்த கட்சிகளோடும் எந்தவிதமான அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. நாங்கள் திமுக தலைமையிலான கூட்டணியில் தான் அதிகாரப்பூர்வமாக இருக்கிறோம். இந்த கூட்டணி தான் தொடரும் என்று முழுமையாக நம்புகிறேன். அந்த கூட்டணி தான் வருகின்ற தேர்தலிலும் வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன்.
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது குறித்து பேசுவதற்கு இது சரியான நேரம் இல்லை என்று நான் கருதுகிறேன். ஏனென்றால் எதார்த்த அரசியலையும் பார்த்துதான் பேச வேண்டியதாக இருக்கிறது. பீகார் தேர்தல் முடிவுக்கு பிறகு ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு என்பதை பற்றி தற்போது பேசுவதை அவசியமாக நான் நினைக்கவில்லை. பீகார் தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்த முடிவு வராதது எங்களுக்கு பின்னடைவு தான், இல்லை என்று நான் கூறவில்லை. அந்த தேர்தல் தமிழ்நாட்டை பாதிக்குமா என்றால் பாதிக்காது. பீகாரில் பாஜக வலுவான கூட்டணியை அமைத்தது குறிப்பாக ராம் விலாஸ் பஸ்வான் கட்சி பிஜேபியோட கூட்டணி சேர்ந்தது. இதனால் அந்த கூட்டணிக்கு ஒரு பலம் சேர்ந்தது. 5 சதவீத வாக்கு அவர்களுக்கு சென்றது. அதன் பிறகு இரண்டு சமுதாய கட்சிகளிடமும் தலா ஒரு சதவீதம் வாக்குகளும் என இரண்டு சதவீதம் என மொத்தம் ஏழு சதவீதம் வாக்கு கூடுதலாக பாஜக கூட்டணிக்கு சென்றது. ஏஎம்எம் கட்சி தனித்து நின்றதால் எங்களுக்கு வரக்கூடிய வாக்குகள் சிதறியது. அதோட மட்டுமின்றி தேர்தல் நேரத்தில் பீகார் மாநில அரசு ஒவ்வொரு பெண்கள் வங்கி கணக்கிலும் பத்தாயிரம் ரூபாய் செலுத்தியதால் பாஜக அணிக்கு பெண்கள் வாக்கு அதிகம் சென்றது. அவ்வளவுதான் நாங்கள் கடந்த தேர்தலில் வாங்கிய அதே வாக்கு சதவீதத்தை தான் பீகாரில் நாங்கள் பெற்றுள்ளோம்.

தவெக தலைவர் விஜய்க்கு கணிசமான வாக்குகள் வரும். அந்த வாக்குகள் சீட்டுகளாக மாறாது. தமிழ்நாட்டில் சீமானுடன் சேர்த்து 3.5 முனை போட்டி நடக்கும் போது திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சிக்கு 1962ல் இருந்து பல வருத்தங்கள் இருக்கிறது, அந்த வருத்தத்தில் தற்போதுள்ள வருத்தத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். அந்த வருத்தத்தை போக்க வேண்டும் என்றால் போக்க வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் செய்ய வேண்டும். நான் கொடுக்கும் மருந்தை சாப்பிட காங்கிரஸ் கட்சியில் யாரும் தயாராக இல்லை. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தலைமைக்கு நான் வர வாய்ப்பு இல்லை. கொடுத்தால் செய்கிறேன் என்று தான் நான் கூறுகிறேன். ஆனால் எனக்கு கொடுக்க மாட்டார்கள், ஏனென்றால் நான் கொடுக்கக்கூடிய மருந்தை சாப்பிட யாரும் தயாராக இல்லை. எனது தந்தை பெரியாளாக இருந்தாலும் அவருக்கு தலைமைப் பொறுப்பு கொடுத்ததே இல்லை. எனக்கும் கொடுக்க மாட்டார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்” என்றார்.


