இரு மொழிக் கொள்கையை எந்த காலத்திலும் திமுக அரசு விட்டுக் கொடுக்காது- கருணாஸ்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும் நடிகர்ருமான கருணாஸ் தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து சாமி கும்பிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கருணாஸ், ”தன்னுடைய பிறந்தநாளை ஒட்டி இங்கு வந்து ஆசி வாங்க வந்தேன். இனிய பிறந்தநாள் முன்னிட்டு சிவகாசியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரின் விளையாட்டுதுறையை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவில் கபடி போட்டி நடைபெற உள்ளது. விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு போடப்பட்டதற்கு அரசியல் காரணம் இருக்கலாம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிறைவாக உள்ளது. சிறு தவறு கூட நடந்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் தற்போது பாலியல் குற்றங்கள் 15 ஆண்டு காலமாக அதிகரித்து இருக்கிறது. இதற்கு காரணம் நம்முடைய வாழ்க்கை முறை, செல்போன் தவறான விஷயங்களை மக்களிடம் எடுத்துச் செல்கிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்கிறது. திமுக ஆட்சியில் எந்த ஒரு குற்றச்சாட்டும் உடனடி நடவடிக்கை எடுத்து சரி செய்யப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்பது 200% உண்மையான செய்தி, அதற்கு காரணம் ஈரோடு இடைத்தேர்தல். அதற்குக் காரணம் நான்காண்டு கால நல்லாட்சி மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு துறையில் முன்னேற்றம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்றதோ அதைப்போல சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும்.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் தொடர்ந்து தமிழகம் வஞ்சிக்கப்படுவது தொடர் கதைதான். இது சாதாரண பொது மக்களுக்கும் தெரியும். பிஜேபி ஆளும் மாநிலங்களில் உள்ள தலைவர்களும், அவர்களுக்கு நிதி ஒதுக்காததை பற்றி கொஞ்சம் கூட வருத்தம் இல்லாமல் அதை பெருமையாக சொல்வது வேதனைக்குரியதுதான். டெல்லியை பிடிக்க என்னென்ன கூத்து நடந்தது என்பதை அனைவரும் அறிவர். பாஜக ஆட்சி மதவாத கூட்டணி, கடந்த ஐந்தாண்டுகளில் அமலாக்கத்துறை மூலம் எவ்வளவு நெருக்கடியை கொடுத்து இருப்பார்கள். அவர்கள் எந்த மாநிலத்தில் என்னென்ன குறைகளை வைத்து ஆட்சி செய்ய முயற்சி செய்தாலும் தமிழகத்தில் எடுபடாது, தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மும்மொழிக் கொள்கை விஷயத்தில் தமிழக முதல்வர் உங்கள் நிதி எங்களுக்கு தேவை இல்லை என உறுதியாக கூறிவிட்டார். தமிழகத்தைப் பொறுத்தவரை இரு மொழிக் கொள்கைதான் அதை எந்த காலத்திலும் திமுக அரசு விட்டுக் கொடுக்காது” என்றார்.