'எவருக்கு தன் சாதி என்ன என்று தெரியாதோ அவர் கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்' பாஜக எம்பி பேச்சுக்கு கருணாஸ் கண்டனம்

 
Ken Karunas shares an update on his father’s ailment Ken Karunas shares an update on his father’s ailment

பா.ஜ.க எம்.பி அனுராக் தாக்கூரின் இழிவான பேச்சில் மேலாதிக்க சாதிவெறி வெளிப்பட்டது என நடிகர் சே. கருணாஸ் தெரிவித்துள்ளார்.

karunas


இதுதொடர்பாக கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சங்க் பரிவாரக் கும்பலைச் சேர்ந்த அனுராக் தாக்கூரின் திமிர் பேச்சு கடந்த ஜூலை 30 இல் நாடாளுமன்றத்தில் ஒலித்தது. இவர்களின் உண்மை முகம் அடிக்கடி இப்படிதான் வெளியே வரும். இந்திய மக்கள் முன் காவிகள் மீண்டும் அம்பலப்பட்டுள்ளார்கள்! அதாவது, நாடாளுமன்றத்தில் பா.ஜ.க எம்.பி அனுராக் தாக்கூர் ராகுல் காந்தியை குறி வைத்து, 'எவருக்கு தன் சாதி என்ன என்று தெரியாதோ அவர் கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்' என்று கொக்கரித்தார்! நாடே அதை கேட்டது அவர்கள் யார் என்பதை அவர்களே அடையாளம் காட்டிக் கொண்டார்கள். அது மட்டுமல்ல, அனுராக் தாக்கூரின் இந்தப் பேச்சின் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து பிரதமர் மோடி அனுராக் தாக்கூரை பாராட்டியுள்ளார். இவர்கள் இழிவானவர்கள் என்பதை காட்ட நாட்டுமக்களுக்கு வேறென்ன சான்று வேண்டும்?

ராகுலை பார்த்து “ எவருக்கு தன் சாதி என்னவென்று தெரியாதவர்” என்று பேசும் அனுராக் தாக்கூர், பிரதமர் மோடி உள்ளிட்டோரை பார்த்து கேட்கிறேன்! இவர்களின் சாதி என்ன? சரி, தற்போது இவர்களது சாதி என்னவென்று தெரிந்திருக்கலாம். மூன்று நான்கு தலைமுறைக்கு முன் அனுராக் தாக்கூர், மோடியின் சாதி என்ன? அதற்கான சாதி சான்றிதழ் ஆதாரம் அவர்களிடம் உள்ளதா? இவர்கள் என்ன சாதியில் பிறந்தார்கள் என்பது யாருக்கு தெரியும். மற்றவரை பார்த்து சாதி தெரியாதவர் என்று பேசும் இவர்களுக்கு தன் சாதி என்னவென்று தெரியுமா? அதற்கு சான்று கேட்டு நாம் திரும்ப கேட்டால் என்ன செய்வார்கள்! இதுதான் இவர்களின் ஆதிக்க திமிர்!

அனுராக் தாக்கூர்

பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ் சங்க்பரிவார பார்ப்பனியக் கும்பல் ஏன் சாதி வாரி கணக்கெடுப்போ, மக்கள் தொகை கணக்கெடுப்போ நடத்த தடையாக இருக்கிறார்கள் தெரியுமா? இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி,  பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சம உரிமை மற்றும் வாய்ப்பு கிடைத்துவிட்டால், காலங்காலமாக அதிகார உச்சத்தில் இருந்தவர்கள் அதை இழக்க நேரிடும், அனைவரும் சமம் என்றால், நாமும் இவர்களோடு சமமாகிவிடுமே என்ற பார்ப்பனிய மேலாதிக்கப் பார்வைதான் சாதி வாரியான கணக்கெடுப்பை தடுக்கும் நுண்ணரசியலாக இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இந்த நாட்டில் தலித், உள்ளிட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உரிமைக்கு யார் குரல் எழுப்பினாலும் அவர்கள் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டி இருக்கிறது . அந்த அளவிற்கு பார்ப்பினய மேலாதிக்கம் மற்றும் பெருமுதலாளிய பின்புலம் இந்திய அரசியலை இயக்குகிறது!


சமூகப் பொருளாதார, சாதி கணக்கெடுப்பு என்பது இந்த நாட்டின் 80% மக்களின் கோரிக்கை. ஆனால் நாட்டின் 80% மக்களை மோடியும், அவரது கும்பலும் நாடாளு மன்றத்தில் சாதிய இழிவான பேச்சை உதிர்த்து நாட்டு மக்களை இழிவுப் படுத்தியுள்ளார்கள்! சாதி வாரி, மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் இந்த நாட்டின் முன்னேற்றத்தில் நாம் எவ்வளவு பங்கு வகிக்கிறோம் என்பதை அனைவரும் மதிப்பிட வேண்டும். நம்மை பின்தங்கிய நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே அதை மறைக்க பாஜக-ஆர்.எஸ்.எஸ். சதி செய்கின்றன. எதையாவது செய்து இடஒதுக்கீட்டை பறித்து நம் உரிமைகளை பறித்திட முயல்கிறார்கள். பிகாரில் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, பிகாரில் உள்ள பல்வேறு சாதிகளின் எண்ணிக்கை தெரியவந்தது. பிகாரில் மிகப்பெரிய மக்கள் தொகை ’மிகவும் பின்தங்கிய வகுப்பை’ சேர்ந்தவர்கள் என்று இந்த புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டின. இது மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 36 சதவிகிதம் ஆகும். பிகாரில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகை சுமார் 27 சதவிகிதம். தாழ்த்தப்பட்ட சாதியினர் 19%, உயர் சாதியினர் சுமார் 15% பழங்குடியினர் 1.68%. நாட்டில் ஓபிசி, பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் ஆகியோருக்கு அதிகார வர்க்கத்திலும், முக்கிய பதவிகளிலும் கிடைக்க வேண்டிய பங்கு கிடைப்பதில்லை.

Karunas

இந்திய பொருளாதாரத்தை பொருத்தமட்டில், அம்பானி - அதானி என்கிற இருவரை வைத்தே அரசியல் நடைபெறுகிறது. அவர்களின் கண் அசைவில் இயங்குகின்றனர் பாரத மாதா பிதாமகன்கள்! அம்பானி - அதானியை காக்கும் இடத்தில்தான் பிரதமரும் சபாநாயகரும், ஒன்றிய பாஜக அமைச்சர்களும் இருக்கின்றனர். இந்த கங்காணி அரசியல், இழிவான அரசியல் நாட்டில் களையபடவேண்டும்! இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சம உரிமை மற்றும் வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திட்டங்களைத் தீட்டி, சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம் என்பதை உணரவேண்டும். 2021ஆம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டும் என்றும், அத்துடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மக்களுக்குக் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சம வாய்ப்பு, சம உரிமை வழங்க சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.

கடந்த 1865ஆம் ஆண்டில் அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு மாகாணமான வட-மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பே இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முறையான முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கருதப்படுகிறது. கடந்த 1931ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கடைசி முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கொள்ளப்படுகிறது. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிகள் விவரம் சேகரிக்கப்படவில்லை. ஆனால், பட்டியல் பிரிவில் இருக்கும் பழங்குடியி னருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதால், அவர்களது எண்ணிக்கை மட்டும் சேகரிக்கப்பட்டது. மற்ற சாதியினர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படவில்லை.

மற்ற சாதியினரின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 1931ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இருந்த விகிதமே இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதி தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டாலும், அவை வெளியிடப்படவில்லை. இட ஒதுக்கீடு அளிக்கச் சரியான தரவுகள் புள்ளிவிவரங்கள் தேவை.  தமிழ்நாட்டில் உள் ஒதுக்கீடுகள் கேட்டு சில சாதியினர் பெறுகிறார்கள். சிலர் போராடி கொண்டே இருக்கிறார்கள். நாட்டில் எந்த சாதியினர் எண்ணிக்கையில் கூடுதலாக உள்ளனர் என்பது இன்னும் குழப்பநிலையிலேயே உள்ளது. அடுத்தபடியாக, பல நலத் திட்டங்களை அரசு மேற்கொள்கிறது. அப்போது ஒவ்வொரு சமூகத்தின் சமூக - பொருளாதார பின்னணி தெரிய வேண்டும். அடுத்ததாக, பல்வேறு சாதிகள் தங்கள் எண்ணிக்கை சார்ந்து பல கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். அந்தக் கோரிக்கைகள் சரியா என்பதை அறிய இந்த சாதி வாரிக் கணக்கெடுப்பு  தேவை! அது மட்டுமின்றி இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தால் சரியான தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்கள் இல்லை என்று கூறி, உச்ச நீதிமன்றம் அதை இரத்து செய்கிறது. அனைத்து சமுதாய மக்களும் எல்லா அதிகாரங்களையும் உரிமைகளையும் பெற சாதிவாரி கணக்கெடுப்பு  கட்டாயம் தேவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.