பிறர் பசி போக்கிய மாமனிதநேயர் விஜயகாந்த்- கருணாஸ் புகழஞ்சலி

 
கருணாஸ் விஜயகாந்த்

பிறர் பசி போக்கிய மாமனிதநேயர் கேப்டன் விஜயகாந்த் என தென்னிந்திய நடிகர் சங்க துணைத்தலைவர் நடிகர் கருணாஸ் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி | Tamil News Vijayakanth  hospilized


இதுதொடர்பாக நடிகர் கருணாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “தேமுதிக தலைவர், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இன்று (28.12.2023) இறந்தார் என்ற செய்தி பேரிடியாக என் நெஞ்சில் இறங்கியது. தொடர்ந்து உடல் நிலை சரியின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலம் முன்னேற்றம் கண்டு வீடு திரும்பிய போதிலும், இன்று இறந்துவிட்டார் என்ற போது மிகுந்த வேதனையாக இருக்கிறது. மிகச்சிறந்த மனிதரை இன்று இழந்துவிட்டோம். ஏழைமக்களின் கண்ணீரைத் துடைத்த மாமனிதர். மனிதநேயம் என்ற சொல்லின் முழு உருவம் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். ”அய்யோ…காலனுக்கு கண்கள் இருக்கிறதா இல்லையா? காதுகள் இருக்கிறதா இல்லையா? எங்கள் காலத்தலைவனை எங்களிடமிருந்து பிரித்துவிட்டாயே’’ என்று கண்ணீர் முட்ட அழுகிறோம்!

தமிழக அரசியலில் மிகப்பெரும் மாற்றத்தை உருவாக்க எழுந்தவர், எழுந்தும் முழுமை யடையவிடாது அவரது உடல் நலம் தொடர்ந்து ஒத்துழைக்க மறுத்துவிட்டது. ஆனாலும் அவரது அரசியல் பயணம் தமிழக அரசியல் வரலாற்றில் முகாமையான ஒன்று என்பதை மறுக்க இயலாது. அரசியலுக்கு வருவதற்குமுன்பே தமது ரசிகர் மன்றங்கள் வழியாக ஏழைய எளிய மக்களுக்கு அவர் செய்த கொடைகள் ஏராளம்..ஏராளம்…! தமிழ்நாட்டில் எத்தனையோ கல்விக் கூடங்களுக்கு அவர் செய்த உதவிகள் உதாரணமாகி யிருக்கிறது. எத்தனையோ மருத்துவமனைகளுக்கு அவர் கொடுத்த படுக்கை உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் அவர் பெயரை இன்றும் உச்சரித்துக் கொண்டிருக்கின்றன. மக்களுக்கு அவர் செய்த நன்மைகள் ஒன்றா? இரண்டா? கணக்கிடமுடியாதவை. அதனால்தான் மக்கள்  அவரை கருப்பு எம்.ஜி.ஆர். என்று கொண்டாடினர்.

Actor Karunas withdraws from ADMK alliance; Announcement that there is to  protest | அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து நடிகர் கருணாஸ் விலகல்; எதிர்ப்பு  பிரசாரம் செய்ய உள்ளதாக ...

திரைத்துறையில் அண்ணன் விஜயகாந்த் அவர்களுக்கு பசிப்பிணி போக்கும் கொடை வள்ளல் என்று பெயர். அவரது வீடு, அலுவலகம், வடலூர் வள்ளல் பெருமகனாரின் அணையா அடுப்பை போல எரிந்து கொண்டே இருக்கும். சினிமாக்காரர்களுக்கு மட்டுமின்றி ஏழைமக்களுக்கு அன்றாடம் உணவு கொடுக்கும் எங்களின் ஆண் தாய் அண்ணன் விஜயகாந்த் அவர்கள். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்து உயர்ந்த கலைஞனாய் நிமிர்ந்தவர். அவரது திரைப்படங்களின் அவர் உரைத்த அரசியல் வசனங்கள் இன்றும் என்றும் எப்போதும் அரசியலுக்கு பொருத்தமானதாக இருக்கும். திரையில் எப்படி ஒரு தூய்மையான அரசியலை முன்னேடுத்தாரோ அதை தரையிலும் நடைமுறைபடுத்த உழைத்தவர், அரசியலில் வழிகாட்டியாக வாழ்ந்தவர் விஜயகாந்த் அவர்கள்.

இந்திய அளவில், நாட்டில் எங்கு எந்த பேரிடர் துன்பம் நிகழ்ந்தாலும், முதல் ஆளாக நிதி உதவி தந்து முன்னத்தி ஏராக நின்றவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். நான் திரைத்துறையில் நடிகனாக இன்று இருப்பதற்கு அண்ணன் விஜயகாந்த் அவர்கள்தான் உந்து சக்தி. அவரை நான் பார்த்துக் கற்றுக் கொண்டவை, அவரை பின்பற்றும் பண்புகள் பல. இன்று அவரை இழந்துவிட்டேன் என்கிறபோது பெருத்த சோகம் என்னை வாட்டி வதைக்கிறது. திரைத்துறையை சீர்படுத்தியதில் அதை அடுத்தக்கட்ட முன்னேற்றத்திற்கு உயர்த்தியதில் விஜயகாந்த் அவர்களின் பணி அளப்பறியது. தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக அவர் இருந்த போது நடிகர் சங்கத்தின் கடனை தான் ஒருவராக நின்று அடைத்தார். நட்சத்திரகலைவிழாக்கள் நடத்தி அதன் வழியாக நடிகர் சங்கத்திற்கு கூடுதல் நிதியை வைத்துவிட்டுச் சென்றார். அவர் செய்த எத்தனையோ நன்மைகள் காலத்தால் அழியாதவை!

யார் அவரை சந்தித்தாலும், அவரை முதலில் சாப்பிட வைத்துவிட்டுதான் அடுத்து பணியை செய்வார். பிறர் பசி போக்கிய அந்த மிகச்சிறந்த மனித நேயரை இன்று இழந்துவிட்டோம். அவர் மறைந்தாலும், மக்கள் மனதில் என்றும் வாழ்வார். மக்களுக்காய் வாழ்ந்தவர்கள் இறந்தாலும் வாழ்வர். அண்ணன் விஜயகாந்த் எப்போதும் நம்மோடு வாழ்கிறார். அவரின் மக்கள் தொண்டாற்றும் பண்பை நாம் பின்பற்றி வாழ்வதே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.  எங்கள் புரட்சிக்கலைஞர், மாமனிதநேயர், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறப்பு தமிழக மக்களுக்கு மட்டுமின்றி, திரைத்துறையினர்க்கு பேரிழப்பு. அவரை இழந்துவிடும் அவரது குடும்பத்தினருக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும், திரைத்துறையினர்க்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அண்ணாரின் ஆன்மா இயற்கையடி சேர எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ள்ர்.