# KARUR துயரம் - உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் எந்தெந்த வழக்குகளில் என்னென்ன உத்தரவு?

 
1 1

த.வெ.க. தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.இந்த வழக்கு சம்பந்தமாக 11 வழக்குகள் இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. இதில் எம்.எல்.ரவி என்பவர் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வு தொடக்க நிலை விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது இதை எப்படி சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியும் என்று கேள்வி எழுப்பியதுடன், அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், சிபிஐ விசாரணை கோருவதற்கு பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு இல்லாதவருக்கு என்ன தகுதியுள்ளது? என்று மனுதாரருக்கு கண்டனத்தையும் பதிவு செய்தார். 

விசாரணையில் திருப்தியில்லை என்றால்தான் விசாரணையை மாற்ற உத்தரவிட கோர முடியும் என்றும், இது சிபிஐ விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதால் கூடுதல் இழப்பீடு தரக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு, விசாரணை நடைபெற்று வருவதால் தற்போது கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிட இயலாது என்றும் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளித்துள்ளனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த துயர சம்பவத்தில் அரசு மற்றும் விஜய் தரப்பினர் 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். கரூரில் நடந்த பரப்புரை காரணமாகவே 41 பேர் உயிரிழந்ததால் இனி விதிகளை வகுக்கும் வரை கூட்டம் நடத்த அனுமதியில்லை என்று அரசுத்தரப்பில் என்று வாதிட்ட நிலையில், ஏற்கனவே அனுமதி பெற்ற கட்சிகள் கூட்டம் நடத்த தடையில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் அரசையும் விமர்சித்துள்ள நீதிமன்றம் பாெதுக்கூட்டங்கள் நடக்கும்போது அதில் பங்கேற்பவர்ள் வெளியில் செல்வதற்கும் வழிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

▪️ சிபிஐ விசாரணை கோரிய பொது நல மனுக்கள்:

விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி தள்ளுபடி

▪️ இழப்பீட்டை உயர்த்தக் கோரிய பொதுநல மனுக்கள்:

பாதிக்கப்பட்டோர் தரப்பில் இதனை மனுவாக்க தாக்கல் செய்யவும், 2 வாரங்களில் விஜய் மற்றும் அரசுத் தரப்பு இது குறித்து பதிலளிக்கவும் உத்தரவு

▪️ பொதுக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய பொதுநல மனுக்கள்:

சென்னை அமர்வில் இது தொடர்பான மனு நிலுவையில் இருப்பதால், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்த நீதிபதிகள், இந்த மனுக்களையும் அதனுடன் இணைத்து விசாரிக்க புதிய இடையீட்டு மனுவை தாக்கல் செய்ய உத்தரவு