மூச்சுத்திணறி பலியான கணவன் உடலை கண்டு மயங்கிய நிறைமாத கர்ப்பிணி
கரூரில் தவேக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் மூச்சுத்திணறி எரியோடு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் பலியானார்.
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே உள்ள ஒத்தப்பட்டியை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன் (வயது 26). இவர் கரூரில் தங்கி இன்டீரியர் டெக்கரேஷன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். தாமரைக்கண்ணனுக்கு தீபா(23) என்ற மனைவி உள்ளார். தீபா தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த மாதம் தீபாவிற்கு வளைகாப்பு முடிந்து, சேவைக்காரன்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் தாமரைக்கண்ணன் நேற்று கரூரில் நடைபெற்ற விஜயின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தாமரைக்கண்ணன் பரிதாபமாக பலியானார். இறந்த தாமரைக்கண்ணனின் உடல் இன்று ஒத்தப்பட்டியில் உள்ள மயானத்திற்கு கொண்டுவரப்பட்டது. அவரின் உடலுக்கு உறவினர்களும் ஊர் மக்களும் கதறி அழுதபடி அஞ்சலி செலுத்தினர். ஊரிலிருந்து வந்த நிறைமாத கர்ப்பிணியான தீபா தனது கணவரின் உடலை பார்த்து கதறி அழுது மயங்கி விழுந்தார். இந்த காட்சி காண்பவரை கண்கலங்க வைத்தது. விஜய் பிரச்சாரத்திற்கு சென்று கூட்ட நெரிசலில் சிக்கி கூலித் தொழிலாளி பலி சம்பவத்தால் ஒத்தப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.


