கவரப்பேட்டை ரயில் விபத்து: செல்போன் மூலம் திட்டமா?? 200 பேரிடம் போலீஸார் விசாரணை..!!
பொன்னேரி ரயில் நிலையம் மற்றும் கவரைப்பேட்டை நிலையத்தில் விபத்து நடைபெற்ற நேரத்தில் பேசிய 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் பாக்மதி ரயில் விபத்துக்குள்ளான வழக்கை கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். குறிப்பாக ஸ்டேஷன் மாஸ்டர், பைலட் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். தொழில் நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்படவில்லை, தண்டாவளத்தில் நட்டு, போல்ட் கழட்டப்பட்டதாலேயே விபத்து நிகழ்ந்திருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதனால் விபத்தின் போது சிசிடிவி காட்சிகள் மற்றும் அச்சமயத்தில் செல்போன் பேசிய நபர்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விபத்து நடைபெற்றதற்கு முன்னதாக கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் இரவு 8 மணி முதல் 8.30 மணி வரையிலும், பொன்னேரி ரயில் நிலையத்தில் 1 மணி முதல் 5 மணி வரையிலான நேரத்தில் செல்பொனில் பேசிய நபர்களின் பட்டியலை டவர் டம்ப் முறையில் போலீஸார் தயாரித்துள்ளனர். அதில் சந்தேகப்படும் படியான நபர்களான சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். டெலிகிராம், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் கால் மூலமாகவும், வி.பி.என்ணை பயன்படுத்தி போன் பேசிய நபர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி ரயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய நபர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.


