கவின் ஆணவக்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவின்குமார் (28)தனது உடல்நிலை சரியில்லாத தாத்தாவைச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்று திரும்பும்போது வழிமறித்து அருவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளி சுர்ஜித்தின் தாய் தந்தை இருவரும் காவல்துறையில் உதவி ஆய்வாளர்களாக பொறுப்பில் உள்ளனர். காவல்துறையில் பணியாற்றி வரும் சரவணன் - கிருஷ்ணகுமாரி தம்பதியின் மகளைக் காதலித்து வந்ததால் சகோதரரால் இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. காவல்துறையினர் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சுஜித் மற்றும் அவரது தந்தை- தாய் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்திருந்தாலும் சுஜித்தை மட்டுமே கைது செய்துள்ளனர். தனது சகோதரியை காதலிக்கும்படி டார்ச்சர் செய்து வந்ததால் கவினை கொன்றதாகவும் சுர்ஜித் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.அதைத்தொடர்ந்து சுர்ஜித் மற்றும் அவர்களது பெற்றோர் உதவி ஆய்வாளர்கள் மீதும் கொலை உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சுர்ஜித் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினரின் நடவடிக்கையால் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

இந்நிலையில் நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கின் தன்மை, முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு விசாரணை பாரபட்சமற்றதாக இருப்பதை உறுதி செய்யவே சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.


