“நான் நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பெண்... எதையும் மறைக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை”- கெனிஷா
எதையும் மறைக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை என விமர்சனங்களுக்கு நடிகை கெனிஷா பதிலடி கொடுத்துள்ளார்.

தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் ரவி மோகன் தனது சமூக வலைதளத்தில் அறிவித்தார். நீண்ட கால யோசனை மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான தனது திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக அவர் கூறியிருந்தார். ரவி மோகன் - ஆர்த்தி ரவி பிரிவுக்கு காரணம் பாடகி கெனிஷா என்று பலரும் கூறிய நிலையில், ரவி மோகன் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில், அண்மையில் நடந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமண விழாவில் கெனிஷாவும் ரவிமோகனும் ஜோடியாக வருகை தந்தனர். இதனையடுத்து, இந்த விவகாரத்தில் நீண்டநாட்களாக மவுனம் காத்து வந்த ஆர்த்தி ரவி, எங்கள் பிரிவுக்கு காரணம் மூன்றாவது ஒரு நபர் தான் என அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பெண். நடந்ததற்கு நான் தான் காரணம் என உறுதியாக இருந்தால், என்னை நீதிமன்றத்திற்கு வர வையுங்கள். எனக்கு எதிராக வெறுப்பை மட்டுமே நீங்கள் மீடியாவில் பரப்புகிறீர்கள். தயவுசெய்து அதை நிறுத்துங்கள். நீங்கள் எனக்கு கொடுக்கும் கமெண்டுகள், சாபம், கொலை மிரட்டல் போன்ற விஷயங்களால் நான் என்னநிலையில் இருக்கிறேன் என யாராவது யோசித்தீர்களா? கர்மா பற்றி பேசி என்னை குறை சொல்கிறீர்கள். ஆனால் உண்மை வெளியில் வரும்போது உங்களுக்கு எல்லாம் என்ன நடக்கும் என நான் பார்க்க விரும்பவில்லை. எதையும் மறைக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. இந்த விஷயத்தில் கடவுளிடம் தான் சரணடையவுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


