சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் - முக்கிய வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல்

 
Erode East

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாளை காங்கிரஸ், அதிமுக மற்றும் அமுமுக கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதால் இடைத்தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக கடந்த 4ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சிவப்பிரசாத் , தேமுதிக சார்பில் ஆனந்த் , நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என இரண்டு தரப்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  இதனிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன் தினம் தொடங்கியது. 

Erode East

முதல் நாளில் 10-க்கும் மேற்பட்ட சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், 4 பேர் மனுக்கள் ஏற்கப்பட்டன. மற்ற 6 பேர் மனுக்கள் முறையாக பூர்த்தி செய்யாததால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.  இதேபோல் நேற்று  6 பேர் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 2 நாட்களில் மட்டும் 10 பேர் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதைத்தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகிறது. இன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இந்நிலையில் நாளை முக்கிய கட்சிகளான காங்கிரஸ், அதிமுக, அ.ம.மு.க ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.  ஒரே நாளில் 3 பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வருவதால் அனைத்து ஏற்பாடும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். வேட்பு மனு தாக்கல் செய்ய 7-ந்தேதி கடைசி நாளாகும். 8-ந் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 10-ந் தேதி வேட்பு மனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.