சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு..
ஆள் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞர் தனுஷ், தேனியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞர் தனுஷின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏ-வுமான ஜெகன் மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் பெண்ணின் தந்தை உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை நடத்துவதற்காக, திருவள்ளூர் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீஸார், ஆண்டர்சன்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் மாலை சென்றனர். 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அவர் வீட்டில் இல்லை என்பதும் தலைமறைவானதும் தெரியவந்தது.
இந்நிலையில், பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பூவே ஜெகன்மூர்த்தி சார்பாக மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கிற்க்கும் பூவை ஜெகன்மூர்த்திக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், இது பொய்யாக தொடரப்பட்ட வழக்கு என்றும் வாதிட்டார்.

அதேநேரம் காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் தாமோதரன், இந்த வழக்கை பொறுத்தவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தில் காவல்துறை ஏடிஜிபி ஜெயராமனுக்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார். ஏடிஜிபி ஜெயராமனின் வாகனம் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். வழக்கில் ஏடிஜிபி ஜெயராமுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும் என்றும், வழக்கில் ஆரம்ப கட்ட முகாந்திரம் இருப்பதாகவும் கூறினார்.
இந்த வழக்கில் இருவரையும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக தனது வாதங்களை முன்வைத்த அரசு வழக்கறிஞர், அவருக்கு பினை வழங்கு கூடாது என்றும் வலியுறுத்தினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன், பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் மதியம் 2:30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவிட்டுள்ளார்.


