தேர்தல் வாக்குறுதியைப் பற்றி பேசுவது வெட்கக்கேடு... ஈபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை இழந்து நிற்பார்- கே.என்.நேரு

 
s s

உட்கட்சி பிரச்னை, கூட்டணிப் பூசல், கூட்டணி அரசு சத்தம் எல்லாம் எம்.ஜி.ஆர் மாளிகையிலும் கமலாலயத்திலும் தைலாபுரத்திலும் இருந்துதான் நாள் தவறாமல் வருகிறது. அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாத பொம்மைதான் பழனிசாமி, அடுத்த மே தினத்தில் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை மட்டுமல்ல, அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை இழந்து நிற்பார் என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

Enslaving TN to tax regime, EPS posturing now: Minister Nehru

இதுதொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு தனது எக்ஸ் தளத்தில், “எதிர்க் கட்சித் தலைவர் பழனிசாமியின் நினைப்பு பெட்டியில்தான் உள்ளது. செய்திகளைப் பார்க்காமல், படிக்காமல் அரைவேக்காட்டுத்தனமான அரசியலைச் செய்து வருகிறார் பழனிசாமி. உட்கட்சி பிரச்னை, கூட்டணி பிரச்னையை மறைக்க அறிக்கை அரசியல் செய்து வருகிறார் என்று தஞ்சையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடுத்த பதிலடி பழனிசாமியின் நெஞ்சாங் கூட்டை கிழித்துவிட்டது போல!‘நெஞ்சு கிழிஞ்சிருச்சே எங்கே முறையிடலாம்’ என எக்ஸ் பக்கத்தில் வந்து ஒப்பாரி வைத்திருக்கிறார். எங்கள் முதலமைச்சர் சுட்டிக் காட்டியது போல பழனிசாமியின் பதிவும் அதே அரைவேக்காட்டுத் தனமாகத்தான் இருக்கிறது.

திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையாம். யார் சொல்லுவது பழனிசாமி? 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தேர்தல் அறிக்கையில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் செல்போன் விலையின்றி வழங்கப்படும் என்று சொன்னார்கள். செய்தார்களா? பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில், இலவச 'வை-பை' இணையதள வசதி வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார்களே… ஐந்தாண்டு ஆட்சியில் ஏன் நிறைவேற்றவில்லை? அதற்கு முந்தைய தேர்தலான 2011 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் நாளொன்று 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட அம்மா குடிநீர் வழங்கப்படும் என்று சொன்னார்களே… நிறைவேற்றினார்களா? அம்மா பேங்கிங் கார்டு, தமிழன்னை சிலை, குறைந்த கட்டணத்தில் அம்மா தியேட்டர் என்று கலர் கலராக எத்தனை மத்தாப்புகளைக் கொளுத்தினார்கள்? இதையெல்லாம் நிறைவேற்றாத பழனிசாமி திமுகவின் வாக்குறுதியைப் பற்றி வக்கணையாகப் பேசுவது வெட்கக்கேடு.  

kn nehru slams eps and minister vijayabaskar on duraikannu mysterious demise

கூட்டணி ஆட்சி, பாஜக ஆட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்றெல்லாம் தினமும் சொல்லி பழனிசாமியின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது கமலாலயம். இன்னொரு பக்கம் அடிமை பழனிசாமியின் அடிமைகள், ’பழனிசாமிதான் அடுத்த முதல்வர்’ என மும்மாரி துதி பொழிந்து கொண்டிருக்கிறார்கள். ஒரே கூட்டணியில் தூற்றவும் செய்கிறார்கள்; துதியும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான மாய உலகில் வாழும் பழனிசாமியை மீட்க வழியே இல்லை! வாக்குச்சாவடியில்தான் முதல்வரை மக்கள் தேர்வு செய்வார்கள். அது நடக்காது என்பதால்தானோ, பழனிசாமியை முதல்வர் ஆக்கத் தியானம் செய்து சிறப்புப் பூஜையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். அதிமுக கூட்டணிக் குழப்பங்கள் தேர்தல் வரை தொடர்ந்தால், அடுத்த மே தினத்தில் பழனிசாமி எதிர்க் கட்சித் தலைவர் பதவியை மட்டுமல்ல, அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை இழந்து நிற்பார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராகி இருந்திருந்தால்தான் பழனிசாமிக்கு மக்கள் நலன் மீது கவனம் இருந்திருக்கும். கூவத்தூரில் பெட்டி பெட்டியாக பணத்தைக் கொடுத்து, முதலமைச்சராக ஊர்ந்தெடுக்கப்பட்ட பழனிசாமிக்கு, கவனம் முழுக்க முழுக்க ‘பெட்டி’ மீதேதான்  இருந்து வருகிறது.


மக்கள் குறைகளைத் தீர்ப்பதே முதன்மையான முழுநேரப் பணி என நாள்தோறும் பணியாற்றி வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் டெல்லிக்கு அடிமை சேவகம் செய்வதையே முழு நேரப் பணியாகச் செய்து வந்த பழனிசாமிக்கு மக்கள் நலத்திட்டங்கள் எல்லாம் கண்ணுக்குத் தெரியாது!. பத்திரிகைகளைப் படிக்காமல், தொலைக்காட்சி செய்திகளை பார்க்காமல் வாட்ஸ்அப் தகவலை நம்பி அறிக்கை விடும் பழனிசாமிக்கு கோவம் மட்டும் டன் கணக்கில் வருகிறது. உங்கள்  பொய்யை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தியதை எண்ணி பழனிசாமி அவமானப்பட வேண்டும். நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் தொலைக்காட்சியை பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன் என்று கூறி ஆட்சி நடத்தியவர்தானே பழனிசாமி! உங்களைப் போல அப்பாவி மக்களைச் சுட்டுக் கொன்று ஆட்சி நடத்தாமல், மக்களின் குறைகளைக் காது கொடுத்துக் கேட்டுச் சரிசெய்யும் முதலமைச்சராக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இருக்கிறார். எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத அடிமை அதிமுக ஆட்சி போல் இல்லாமல் சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் நிறைவேற்றி வருகிறார் முதலமைச்சர் அவர்கள். உட்கட்சி பிரச்னை, கூட்டணிப் பூசல், கூட்டணி அரசு சத்தம் எல்லாம் எம்.ஜி.ஆர் மாளிகையிலும் கமலாலயத்திலும் தைலாபுரத்திலும் இருந்துதான் நாள் தவறாமல் வருகிறது. அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாத பொம்மைதான் பழனிசாமி” எனக் குறிப்பிட்டுள்ளார்.