திருச்சி விமான நிலையத்தில் சீமானிடம் இருந்து கத்தி பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் சீமானிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு செல்வதற்காக வந்த அவரிடம் சி.ஐ.எஸ்.எப் படையினர் சோதனை நடத்திய போது, சிறிய கத்தி அவரிடம் இருந்துள்ளது. தடை செய்யப்பட்ட பொருள் என்பதால் கத்தியை பறிமுதல் செய்து அவரை அனுப்பி வைத்துள்ளனர்.
திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த போது அவர் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்தனர். அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும் செய்தியாளர் சந்திப்பிலும் அவதூறாக பேசினார். இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருண்குமார் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற எண் 4 நீதிமன்றத்தில் சீமான் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆஜராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருச்சிக்கு வந்தார்.