டாஸ்மாக்கில் ரூ.1 லட்சம் கோடி ஊழல்- அமலாக்கத்துறை, சிபிஐயிடம் புகார் அளிக்க உள்ளேன்: கிருஷ்ணசாமி

 
கிருஷ்ணசாமி

டாஸ்மாக்கில் நடந்துள்ள ரூ.1 லட்சம் கோடி ஊழல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் & செந்தில் பாலாஜியை விசாரிக்க, பிரதமர் மோடி, அமித்ஷா, அமலாக்கத்துறை & சிபிஐ-யை ஜூலை 20 முதல் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளேன் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 

Image

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "பல பகுதிகளில் கனிமவள கொள்ளை நடக்கிறது, கள்ளச்சாராய விற்பனை நடக்கிறது, சட்டவிரோத பார்கள் நடக்கின்றன, தாலுகா மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இவற்றை எல்லாம் தடுத்து நிறுத்தக்கூடிய பொறுப்பு புதிய தலைமைச் செயலாளருக்கு இருக்கிறது. இவர்களுடைய காலத்திலாவது இதை அவர்கள் சரி செய்ய வேண்டும்.

புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மே மாதம் 10ம் தேதி சென்னையில் பிரம்மாண்ட பேரணி நடத்தி, டாஸ்மாக்கில் நடக்கும் 1 லட்சம் கோடி ஊழல் குறித்து மனு கொடுத்து, அந்த மனுவிலே விசாரணை கமிஷன் அமைக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைத்தேன். ஆளுநரிடம் இந்த ஊழலுக்கு காரணமானவர்கள் மீது வழக்கு தொடுக்க அனுமதி கேட்டிருந்தேன். இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. மே 10ம் தேதி மனு கொடுத்த பிறகு, தமிழகத்தில் செயல்பட்ட 5362 பார்களில், பெரும்பாலான சட்ட விரோத பார்கள் மூடப்பட்டன. ஆனால் அது போதாது. இந்த சட்ட விரோத பார்கள் மூலம் 24 மாதங்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அரசு கஜானாவுக்கு வந்து சேரவில்லை. எனவே அதற்கு காரணமானவர்கள் மீது வழக்கு தொடுத்தால் தான், அரசுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட முடியும்.

கிருஷ்ணசாமி

வெறும் செந்தில் பாலாஜி மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. இது தமிழக மக்களின் அர்ப்பணிப்பு சம்பந்தப்பட்ட விஷயம். முதல்வர் ஸ்டாலின், செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடுத்தால் தான், இதை மீட்க முடியும். ஆளுநர் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், செந்தில் பாலாஜி மீது வேலைக்கு பணம் வாங்கியது உட்பட பல்வேறு வழக்குகள் இருப்பதாக சொல்லியுள்ளார். அதில் நாங்கள் சொன்ன டாஸ்மாக் ஊழல் குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே காலம் தாழ்த்தாமல் வழக்கு தொடுக்க அனுமதி தர வேண்டும். ஜூலை 20 முதல் 25ம் தேதிக்குள் டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷ் மற்றும் அமலாக்கத்துறை, சிபிஐ அதிகாரிகளையும் சந்தித்து இந்த டாஸ்மாக் ஊழல் பற்றி விசாரிக்க கோரிக்கை வைக்க உள்ளேன்." என்று தெரிவித்தார்.