ஈகோவையும், கௌரவத்தையும் விட்டுவிட்டு திமுகவை வீழ்த்த ஒன்றிணைய வேண்டும்- கிருஷ்ணசாமி

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட திருவப்பூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் இட ஒதுக்கீடு மீட்பு கருத்தரங்க மற்றும் நிர்வாகிகள் கருத்து கேட்ப கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமி, “தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டபூர்வமாக இருக்கிறது. அதில் 18 சதவீதம் பட்டியலின மக்கள் என்று அழைக்கப்படக்கூடிய 76 சாதியினருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 2009இல் 18 சதவீதத்தில் மூன்று சதவீதம் அருந்ததியருக்கு என்றும் மீதமுள்ள 15 சதவீதம் தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதிதிராவிட பறையருக்கு என்று ஒதுக்கப்பட்டது. உள் ஒதுக்கீடு முன்னுரிமை அடிப்படையில் இந்த மூன்று சதவீதத்தையும் எடுத்துக்கொண்டு எஞ்சி இருக்கக்கூடிய 15 சதவீதத்திலும் தேவேந்திர குல வேளாளர் மற்றும் பறையர் சமூகத்திற்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டை இன்று இருக்கக்கூடிய திமுக அரசு சட்டவிரோதமாக எடுத்துக் கொடுத்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மூத்த குடிமக்களான தேவேந்திரகுல வேளாளரும், பறையர் சமூக மக்களும் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதற்கு மே மாதம் 17ம் தேதி மிகப்பெரிய அளவில் கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
2026ல் எப்படிப்பட்ட கூட்டணிகள் அமையும் என்பது தெளிவில்லாத நிலையே இருக்கிறது. ஆளுங்கட்சியான திமுகவில் ஏழு, எட்டு கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள மற்ற எதிர்க்கட்சிகள் முடிவான நிலையை எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான காலம் கனிந்து வருகிறது. திமுகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒருங்கிணைய வேண்டும். திமுகவை தோற்கடிக்க வலிமையான கூட்டணி அமைய வேண்டும். யார் தலைமையில் கூட்டணி அமையும் என்பதெல்லாம் தற்போது சொல்ல முடியாது. யார் தலைமையில் வேண்டுமென்றாலும் அமையலாம் ஏன் புதிய தமிழகம் கட்சி தலைமையில் அமைய கூட வாய்ப்பு இருக்கிறது. 30 ஆண்டுகளாக நாங்களும் இருக்கின்றோம் யார் தலைமையில் அமையப்போகிறது என்று முக்கியமல்ல, தலைமையை விட்டுவிட்டு சுய கௌரவத்தை விட்டுவிட்டு அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு எதிரணிகள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பது பொதுவான அழைப்பாகும்.
திமுகவுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தான் 2026 இல் போட்டி இருக்கும் என்று கூறும் விஜய் அவர் காங்கிரசை எதிர்க்கவில்லை, கம்யூனிஸ்ட் கட்சிகளை எதிர்க்கவில்லை, முஸ்லிம் லீக்கை எதிர்க்கவில்லை. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களை வலுப்படுத்திக்கொள்ள இப்படித்தான் இருக்க முடியும். விஜய் தற்போது தான் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். தனது கட்சியை முன்னிலை படுத்த வேண்டும் என்பதற்காக பேசுகிறார். அது அவரது கட்சியை நிலைப்பாடு ஆனால் அதுவே சரியாக வருமா அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா? என்பதை தற்போது சொல்ல முடியாது அதற்குண்டான காலகட்டம் சூழல் எப்படி வருகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க முடியும். திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பது அனைவரும் எடுத்த முடிவுதான். தனித்தனியாக நிற்பதாக எந்த அரசியல் கட்சியும் சொல்லவில்லை. அனைவருமே ஒரு சூழ்நிலை வருகின்ற வரை தனியாக நிற்கிறேன் அப்படித்தான் கூறி வருவார்கள். ஆனால் 2026 இல் அனைவருமே தனித்தனியாக இருக்கும் மேகங்கள் எல்லாம் ஒரு சூழ்நிலையில் ஒன்று சேர்வதைப் போல திமுகவைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ஒன்றாக சேருவார்கள். இது சாத்தியமாக வேண்டும்” என்றார்.