அனைவரது உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிப் பரவட்டும் - கே.எஸ்.அழகிரி பொங்கல் வாழ்த்து

 
ks alagiri

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் பண்டிகை  கொண்டாடப்படுகின்றது. இந்தியாவில் மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்துத் தரப்பு தமிழ் மக்களாலும் கொண்டாடும் இந்த பொங்கல் விழா, விவசாயிகள் விளைவித்த பயிர்களை அறுவடை செய்ய அத்தனை நாளும் தமக்கு உதவிய சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபடும் நன்னாளாகும். அன்றைய தினம் குளித்து புத்தாடை அணிந்து நண்பர்களுடனும், உறவினர்களுடனும் இணைந்து இவ்விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றனர். மேலும், கால்நடைகளுக்கு நன்றி கூறும் விழா மாட்டுப்பொங்கல். இது இரண்டாம் நாள் விழாவாகும்.  குறிப்பாக, இந்நாளில் விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் காளை மாடுகளுக்கும், இல்லத்தை செழிப்புறச் செய்யும் பசு மாட்டிற்கும் பொங்கலிட்டு வழிபாடு செய்யப்படுகிறது.

ks alagiri

நாகரீக வளர்ச்சியில் கலாச்சாரத்தின் தாக்கம் மற்றக் கலாச்சாரங்களின் மீது படிவது சாத்தியமான ஒன்றாகும். ஆனால், பொங்கல் பண்டிகை என்பது மற்றைய கலாச்சாரத்தை தம்முடன் இணைத்துக் கொண்டு மேன்மேலும் சிறப்புப் பெற்று வருகிறது. பொங்கல் பண்டிகை தமிழர்களின் நன்றி மறவாமை பண்பினை உலகிற்கு பறை சாற்றுவதாகவும் உள்ளது. ‘உழவே தலை” என வாழ்ந்த உழைக்கும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நாம். மண்ணையே குணத்தால் பிரித்து நிலத்தைப் போற்றிய மக்கள் நம் முன்னோர்கள்.  மனிதன் மட்டுமல்ல, மற்ற உயிரினத்தையும் தன்னோடு இணைத்து வாழ்ந்த சமூகம் நம்முடையது. இனம், மண், மக்கள், விளைச்சல், உணவு இவை அனைத்துக்கும் சேர்த்துக் கொண்டாடும் ஒற்றை விழாதான் பொங்கல் பெருவிழா வருகிற ஜனவரி 14 அன்று இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் மணிப்பூரிலிருந்து இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை தொடங்கவிருக்கிறார்.

இந்தப் பயணம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், வருகிற மக்களவைத் தேர்தலில் வகுப்புவாத பா.ஜ.க. ஆட்சி அகற்றப்படுவதற்கான தீவிர முயற்சியாக அவரது பயணம் அமைய இருக்கிறது. தலைவர் ராகுல்காந்தி அவர்களின் பயணம் வெற்றியடைய மனதார வாழ்த்துகிறேன். அனைவரது உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிப் பரவ தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.