குன்னூர் பேருந்து விபத்து - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல்!

 
Ks Azhagiri

குன்னூர் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்த 52 பேர் நேற்று நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு பேருந்து ஒன்றில் சுற்றுலா சென்று திரும்பி வரும்போது நேற்று மாலை 6 மணியளவில் குன்னூர் அருகே மரப்பாலம் பகுதியில் வந்தபோது சுற்றுலா பேருந்து அங்கிருந்த 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் 8 பேர் பரிதாபமாக பலியானதோடு 40 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் பலியான குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். 


உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதலமைச்சர் தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சைக்காக 1 லட்சம் ரூபாயும் நிவாரண நிதியில் இருந்து வழங்கியிருக்கிறார். பொதுவாக சுற்றுலா பேருந்து பயணத்தின்போது நீண்டதூரம் போய் வருகிற சூழலில் ஒரே ஓட்டுனரை மட்டும் நம்பி பயணிக்கிறது. சோர்வு, தூக்கத்தின் காரணமாக இத்தகைய விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே இத்தகைய சுற்றுலா பயணங்களில் 8 மணி நேரத்திற்கு ஒரு ஓட்டுநர் என்ற அடிப்படையில் மாற்று ஓட்டுனர்களை உறுதி செய்கிற வகையில் உரிய நடவடிக்கைகளை சுற்றுலாத்துறையும், போக்குவரத்துத்துறையும் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.