வடமாநில பெண் தொழிலாளர்களை கொடூரமாக தாக்கிய ஆலை நிர்வாகம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தனியார் ஸ்பின்னிங் மில்லில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே தனியார் நூற்பாலையில் உடைந்த இயந்திரத்தை சரி செய்து கொடுக்க வேண்டும் என நிர்பந்தம் செய்து, வடமாநில பெண் தொழிலாளர்களை ஆலை நிர்வாகம் தாக்கியதாக புகார் #Namakkal #NorthIndians #Attack #TamilNews #Newstamil24x7 pic.twitter.com/FnvKQMs4OV
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) May 3, 2026
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் வெப்படை குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் பிரதான தொழிலாக நூற்பாலைகள் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட நூற்பாலைகளில் பீகார், ஜார்கண்ட், மத்திய பிரதேஷ், குஜராத் உத்திர பிரதேஷ் உட்பட வட மாநிலங்களை சார்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நூற்பாலையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்களுக்கு உண்டான அரசு சட்ட விதிகளை பின்பற்றாமல் சில நூற்பாலைகள் செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் அடிக்கடி குற்றம் சாட்டியும் வந்தனர். இந்நிலையில் வெப்படை அருகே உள்ள ஆனங்கூர் பகுதியில் ஆலயா ஸ்பின்னிங் மில் என்ற நிறுவனத்தில் வட மாநிலத்தை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கு வட மாநிலத் தொழிலாளர்கள் பணிபுரியும் போது கவனக்குறைவால் சில இயந்திர உதிரிபாகங்களை உடைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆலை நிர்வாகம் உடைந்த உதிரி பாகங்களுக்கு தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து கொள்வதாக கூறியதாக தெரிகிறது.
இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் ஆலயா ஸ்பின்னிங் மில் நிறுவனத்தில் பணியாற்ற விருப்பமில்லை என நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் கடந்த 23,24 தேதிகளில் நூற்பாலையை விட்டு வெளியேற முயன்ற போது, ஆலை நிர்வாகத்திற்கும் ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் இடையே கடுமையான பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேலும் நூற்பாலை முன் பகுதி கதவுகளை திறக்காமல் தொழிலாளர்களின் உடைமைகளை நிர்வாக ஊழியர் ஒருவர் கைப்பற்ற முயன்று உள்ளதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தை தொடர்ந்து தொழிலாளர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு கிளம்பிச் சென்றனர், தற்போது ஆலை நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களிடம் ஏற்பட்ட பிரச்சனைகளை வட மாநில தொழிலாளர் ஒருவர் அதை தனது மொபைல் போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார் தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறும் பொழுது தொழிலாளர்கள் அந்த ஆலையில் பணியாற்ற விருப்பம் இல்லை என்று கூறிய நிலையில் ஆலையில் இருந்து வெளியேறி உள்ளனர். தொழிலாளர்களுக்கு தரவேண்டிய சம்பள பாக்கி உள்ளிட்ட அனைத்து தொகைகளையும் உடனடியாக வழங்குவதற்கு ஆலை நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

