நாளை வீடுகளில் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் பாடுங்கள் - பக்தர்களுக்கு எல்.முருகன் வேண்டுகோள்..!!

 
Q

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அறிக்கை;

 

திருப்பூரில் பயங்கரவாதச் சதித்திட்டம் தீட்டிய 8 பயங்கரவாதிகளை டில்லி போலீசார் கைது செய்துள்ளனர். பயங்கரவாதத் தாக்குதல் எனும் கொடூர உச்சத்திற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பது தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய திமுக அரசு என்ன செய்தது? டில்லி போலீசார் வந்து கைது செய்யும் வரை தமிழக போலீசார் என்ன செய்துகொண்டு இருந்தனர்? தமிழகத்தில் தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மத்திய என்ஐஏ அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசு பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

கடந்த 2022ம் ஆண்டு, கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக பயங்கரவாத தாக்குதலை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து, பலரை கைது செய்து, பயங்கரவாதத் தாக்குதல் என்பதை உறுதி செய்தது. பல்வேறு வெடிபொருள்கள், ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு, 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் என அனைத்தும் அம்பலமானது.ஆனால் குண்டுவெடிப்பு என்பதை ஏற்க மறுத்து சிலிண்டர் வெடிப்பு என்று இன்றளவும் தமிழக முதல்வர் ஸ்டாலினும், திமுகவினரும் கூறி வருகின்றனர். தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கு மக்களின் பாதுகாப்பை பற்றி எந்த கவலையும் இல்லை. பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் நபர்கள், அமைப்புகளுக்கு மறைமுக ஆதரவு அளித்து வருகிறது.

வாக்குவங்கி அரசியலுக்காக மக்களின் பாதுகாப்பை காற்றில் பறக்கவிடும் போலி திராவிட மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவைப் போலவே, அவர்களது பங்காளிகளும் இதையே செய்கிறார்கள். கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்ய கோரி ஓயாது விஷம பிரசாரம் செய்து வருபவர்களும் திமுக கூட்டணி கட்சியினரே.தமிழக மக்கள் அனைவருமே விழித்துக் கொள்ள வேண்டிய தருணமிது. பயங்கரவாத்திற்கு எதிராகவும், பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்களுக்கு எதிராகவும் கரம் கோர்த்து மக்கள் செயலாற்ற வேண்டும். அனைவரும் வேறுபாடு இல்லாமல் பயங்கரவாதத்துக்கு எதிராக விழிப்புணர்வுடன் ஒன்று சேர்ந்து செயலாற்ற வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி கட்சியினருக்கு தமிழக மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்,இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது; அனைத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் மார்ச் 1ம் தேதி மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இந்தக் கூட்டம் திமுகவை வீட்டிற்கு அனுப்புவதற்கான கூட்டமாக இருக்கும். ஏற்கனவே மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டம் முடிவு செய்தது.

மதுரையில் நடைபெறும் கூட்டம் அதை உறுதி செய்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது பக்தர்கள் சார்பாக பல ஆண்டுகளாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. முருக பக்தர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக போராட்டம் செய்து வருகின்றனர். அதை நிறைவேற்றும் விதமாக நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மீதும் தீர்ப்பு வழங்கியதற்காக அவர் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என திமுக ஒரு அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். திமுகவிற்கு பாடம் புகட்டும் விதமாகவும் தங்களது உணர்வை வெளிப்படுத்தும் விதமாகவும் பக்தர்கள் அனைவரும் தங்களது வீடுகளில், வீட்டு வாசலில் விளக்கேற்றி 23ம் தேதி கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும்.

பிரதமருடைய வருகை திமுகவை வீட்டிற்கு அனுப்பி விடும். காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருப்பார்களா இல்லையா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அவர்கள் எங்கு செல்வார்கள் என்பதும் தெரியவில்லை.ஆனால் எங்கள் கூட்டணி வலுவான கூட்டணியாக வலிமையான கூட்டணியாக உள்ளது. எங்களுடைய கூட்டணியின் தலைவர் பழனிசாமி பல கட்சிகளுடன் பேசி வருகிறார்.

பீஹார், ஹரியானா, மஹாராஷ்டிரா உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் இரட்டை இன்ஜின் அரசை தான் தமிழக மக்கள் விரும்புகிறார்கள்.எம்ஜிஆர் இருக்கும்போது மத்தியிலும் மாநிலத்திலும் அனுகூலமான ஆட்சி நடத்தினார். மக்களே மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான ஆட்சி இருந்தால் தான் தமிழகத்திற்கு வளர்ச்சி ஏற்படும் என்பதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். திமுகவுடன் பிரேமலதா கூட்டணி அமைத்தது, உண்மையிலேயே இந்த கூட்டணியை விஜயகாந்த் ஆன்மா ஏற்றுக்கொள்ளுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.விஜயகாந்தின் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறோம். அவர் கட்சி ஆரம்பித்தது திமுகவுக்கு எதிராக தான் வாழ்நாள் முழுவதும் திமுகவிற்கு எதிரான அரசியல் செய்து வந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இவ்வாறு எல்.முருகன் கூறினார்.