“அதிமுக மீண்டும் ஒருங்கிணைப்பது குறித்து ஈபிஎஸ்- பாஜக தேசிய தலைவர்கள் முடிவு செய்வர்”- எல்.முருகன்
அதிமுக மீண்டும் ஒருங்கிணைக்கப்படுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியும், பாஜக தேசிய தலைவர்களும் முடிவு செய்வார்கள் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

சென்னை சின்ன போரூர் பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மற்றும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது மத்திய பிரதேசத்தில் பிரதமர் மோடி தேசிய நேரலை காணொளி காட்சி வாயிலாக ஒளிபரப்பப்பட்டது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், "பிரதமர் மோடியின் 75 வது பிறந்த நாளை அடுத்த இரண்டு வாரத்திற்கு இந்தியா முழுவதும் பொது சேவைகள் செய்து கொண்டாட உள்ளோம். அந்த வகையில் இன்று கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கான மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இங்கு மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட இந்த முகாம் மூலம் 4 கோடி தாய்மார்கள் மருத்துவ சேவைகளை பெற்றுள்ளனர். அதுமட்டுமின்றி அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்தியா முழுவதும் மக்கள் உள்நாட்டு தயாரிப்பு பொருட்களை பெருமையுடன் வாங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "மத்திய அமைச்சர் அமைச்சாலும் எடப்பாடி பழனிசாமியும் கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு வழக்கமாக ஒரு சந்திப்பை மேற்கொண்டுள்ளனர். அதிமுக மீண்டும் ஒருங்கிணைக்கப்படுமா என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் பாஜகவின் தேசிய தலைவர்களும் சேர்ந்து முடிவு செய்வார்கள். முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி முன்வைத்த கோரிக்கையை அமிர்தா பரிசீலனை செய்வார். இளையராஜா மட்டுமின்றி பாரதியார், ராஜராஜ சோழன் உட்பட ஏராளமான தமிழர்களை பிரதமர் மோடி கௌரவித்துள்ளார். இசைஞானி இளையராஜாவை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு தேர்வு செய்தவர் பிரதமர் மோடி தான். அக்டோபர் ஒன்றாம் தேதியிலிருந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம். ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து என்னால் கருத்து கூற முடியாது ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி திமுகவை விரட்டும் கூட்டணியாக இருக்கும்" என்று கூறினார்.


