நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

 
tn

 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் உள்ளிட்ட 2465 கோடி ரூபாய் செலவிலான 96 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, 1802.36 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 39 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

tn
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.2.2024) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நெம்மேலியில் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் 1516 கோடியே 82 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் மற்றும் 948 கோடியே 18 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற 95 திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, 1802.36 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 39 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 

நெம்மேலியில் ரூ.1516.82 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தல்

வளர்ந்து வரும் சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களை வடிவமைத்து, நிறுவி, இயக்கி மற்றும் திருப்பித் தரும் அடிப்படையில் மீஞ்சூரில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில் 25.2.2007 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 31.7.2010 அன்று இந்நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையத்திலிருந்து கிடைக்கக்கூடிய குடிநீர் மூலம், வடசென்னை பகுதிகளான மணலி, மாதவரம், எண்ணூர், கத்திவாக்கம், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 10 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகின்றார்கள்.
இதனைத் தொடர்ந்து, நெம்மேலியில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கான திட்டப் பணிகளை அன்றைய துணை முதலமைச்சரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 23.02.2010 அன்று அடிக்கல் நாட்டினார்.


இந்நிலையத்தின் மூலம், தென்சென்னை பகுதிகளாகிய சோழிங்கநல்லூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், பெருங்குடி, கொட்டிவாக்கம், பாலவாக்கம், திருவான்மியூர், வேளச்சேரி, தரமணி, பள்ளிப்பட்டு, அடையாறு, பெசன்ட் நகர், நந்தனம், எம்.ஆர்.சி. நகர், இராஜா அண்ணாமலைபுரம், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 9 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

tn

இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் வளர்ச்சியினை தொடர்ந்து சென்னைக்கு அருகாமையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாலும், வளர்ச்சிக்கேற்ப சீரான குடிநீர் வழங்கும் பொருட்டும், பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதனடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் 21.8.2023 அன்று அடிக்கல் நாட்டினார். 

இந்நிலையம் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையமாக அமைய உள்ளது. இந்நிலையம் அமைக்கும் பணிகள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இந்நிலையில், நெம்மேலியில் 1516 கோடியே 82 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையத்திலிருந்து
பெறப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் பொருட்டு 48.10 கி.மீ நீளத்திற்கு குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் சோழிங்கநல்லூரில் இடைநிலை நீரேற்று நிலையம் அமைப்பதற்கான அனைத்து கட்டுமானப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையத்திலிருந்து பெறப்படும் குடிநீர் மூலம், தென் சென்னை பகுதிகளான வேளச்சேரி, ஆலந்தூர், புனிததோமையார் மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்கநல்லூர், உள்ளகரம்-புழுதிவாக்கம், மடிப்பாக்கம். தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் (OMR) அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பகுதிகளில் சுமார் 9 இலட்சம் மக்கள் பயனடைவார்கள்.

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தல்

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில், வளசரவாக்கம் மண்டலம், நெற்குன்றம் பகுதிக்கான விரிவான குடிநீர் வழங்கல் திட்டம்; பெருங்குடி மண்டலம், எல்.பி.சாலை கழிவுநீர் உந்துநிலையத்திலிருந்து பெருங்குடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வரை உந்துகுழாய்கள் சீரமைக்கும் பணிகள் மற்றும் வார்ப்பிரும்பு உந்து குழாய்கள் அமைக்கும் பணிகள்; குன்றத்தூரில் நாளொன்றுக்கு 0.8 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட மாற்றுமுறை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மாற்று சாலையோர கழிவுநீரேற்று நிலையம்; ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் குடிநீர் வழங்கல் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் நாளொன்றுக்கு 8.5 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள்;
என மொத்தம் 129.50 கோடி ரூபாய் செலவில் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 7 முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.