ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு - NIA-வுக்கு மாற்ற வேண்டும்!!

 
Vanathi seenivasan Vanathi seenivasan

தமிழ்நாட்டில் ஆளுநர் மாளிகையிலேயே பெட்ரோல் குண்டு வீசத் துணியும் அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

vanathi srinivasan

இதுதொடர்பாக கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று சென்னை வருகை தர உள்ள நிலையில், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. பெட்ரோல் வீசியதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி கருக்கா வினோத், கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 10-ந்தேதி சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த ரவுடியிடம் மேலும் 4 பெட்ரோல் குண்டுகள் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

vanathi

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய தி.மு.க. அரசு, கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் ஆளுநர் மாளிகையிலேயே பெட்ரோல் குண்டு வீசத் துணியும் அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இந்தச் சூழலில் கோவை குண்டுவெடிப்பு கைதிகளை விடுதலை செய்வதை ஏற்க முடியாது. அவர்களை விடுவித்தால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகள் கிடைக்கும் என அரசியல் லாபக் கணக்கு பார்க்கக் கூடாது. கவர்னர் மாளிகையிலேயே ஒருவர் குண்டு வீச துணிகிறார் என்றால், அது ஒரு தனி நபரின் முயற்சியாக மட்டும் இருக்க வாய்ப்பில்லை. எனவே, ரவுடி கருக்கா வினோத்தின் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.

vanathi srinivasan

தமிழ்நாடு காவல்துறை தி.மு.க.வினரின் உத்தரவுக்கு ஏற்ப இயங்கும் துறையாக இருப்பதால் இந்த வழக்கு விசாரணையை, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அல்லது சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.