தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் சென்றுவிட்டது..!

 
1
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதும், பொதுமக்களுக்கு இடையூறு செய்யாது இருப்பதும், தவறிழைத்தவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தருவதும், தொழில்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை பெருக்கி, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதும் ஒரு மாநில அரசின் தலையாய கடமை என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால், இதற்கு முற்றிலும் முரணாக செயல்படுகின்ற அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கின்றது.

ராணிபேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகாவில் சந்திரன் என்பவர் வெட்டிக் கொலை; இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் மோகன் என்பவர் வெட்டிக் கொலை; தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே குவளைக் கண்ணியைச் சேர்ந்த செல்வராஜுக்கு சரமாரி வெட்டு; தூத்துக்குடி, முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் வெட்டிக் கொலை; கோவையில் கோபாலகிருஷ்ணன் என்பவர் ஓட ஓட வெட்டிக் கொலை; தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள மேலநீலிதநல்லூரில் வெளியப்பன் என்பவர் வெட்டிக் கொலை; சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர் கத்தியால் குத்திக் கொலை; கோவை மாவட்டம், சோமனூர் அருகே கோகுல் என்பவர் கல்லால் தாக்கி கொலை; கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பழனி என்பவர் வெட்டிக் கொலை என எண்ணற்ற கொலை, கொள்ளைகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நடைபெற்று வருகின்றன.

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அன்றாடம் சாதி மோதல்களும், வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இவற்றிக்கெல்லாம் மதுவும், கள்ளச் சாராயமும், போதை பொருட்களின் நடமாட்டமும் தமிழ்நாடு முழுவதும் தலைவிரித்து ஆடுவதுதான் காரணம். இதன் விளைவாக, தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. எங்கு எந்த வகையில் போதை ஆசாமிகள் தாக்குவார்களோ என்ற அச்ச உணர்வில்தான் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.

இரவில் எப்போது ஒரு பெண் தனியாக நடந்து செல்ல முடிகிறதோ அன்றுதான் உண்மையான சுதந்திரம் என்றார் மகாத்மா காந்தி. ஆனால், பகலில், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் கூட்டாகக்கூட நடந்து செல்ல முடியாத அவல நிலை தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. அதாவது, ஏற்கெனவே இருந்த சுதந்திரமும் பறிபோய்க் கொண்டிருக்கிறது. பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் தங்கள் பிள்ளைகளை அனுப்பவே பெற்றோர்கள் அச்சமுறும் நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டு இருக்கிறது.

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் மக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும், காவல் துறையினருக்கும், தொழில் முனைவோர்களுக்கும் இடையூறு அளித்து வருகின்ற அவல நிலை தொடர்கிறது. இதன் விளைவாக, தமிழ்நாட்டில் தொழில் துவங்க தொழில் முனைவோர் ஆர்வம் காட்டுவது வெகுவாக குறைந்து வருவதுடன், ஏற்கெனவே உள்ளவர்களும் பிற மாநிலங்களை நாடிச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள். தொழில் செய்வதற்கு உகந்த மாநிலமாக இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாடு வந்துவிட்டது.

ஜம்மு காஷ்மீரில் கூட மெல்ல மெல்ல அமைதி திரும்பிக் கொண்டிருக்கின்ற நிலையில், தமிழ்நாட்டில் குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்றால், குற்றம் இழைத்தவர்கள்மீது மென்மையான போக்கினை தி.மு.க. அரசு கடைபிடித்து வருகிறது என்றுதான் பொருள். இதன் காரணமாக, குற்றவாளிகளின் ஆதிக்கம் அதிகரித்து, தமிழ்நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. தி.மு.க. அரசின் திறமையற்ற நிர்வாகம்தான் இதற்கெல்லாம் காரணம்.

நாட்டைப் பற்றி கவலை கொள்ளாமல் மனம் போன போக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற தன்னல அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கின்றது. அநீதியும், அதர்மமும் தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. இதனைத் தட்டிக் கேட்க திராணியில்லாத அரசாக தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

சட்டம்-ஒழுங்கு சீர்செய்யப்படாவிட்டால் தமிழகம் சீரழிந்துவிடும் என்பதைக் கருத்தில் கொண்டு, பூரண மதுவிலக்கை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டுமென்றும் தி.மு.க. அரசை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.