இத பாத்து எல்லா சைக்கோங்களும் திருந்தட்டும்...இளம்பெண்ணின் மரண வாக்குமூலத்தில் சிக்கிய கணவரின் குடும்பம்..!
சென்னையை சேர்ந்தவர் வின்சென்ட் - சகாயமேரி தம்பதி. இவர்களுக்கு ராபர்ட் ராஜ் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் கம்பனியில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ராபர்ட் ராஜுக்கு அம்பத்தூரைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் திருமணம் பாதியில் நின்றுள்ளது.
இதனால் திருமணத்திற்காக மண்டபம், உணவு ஆகியவற்றுக்கு கொடுத்த பணம் திருப்பி வராது என்ற காரணத்தால் ராபர்ட் ராஜ்க்கு திருமணம் நின்ற அதே தேதியில் திருமணம் நடத்த அவசரம் அவசரமாக மணப்பெண் பார்த்துள்ளனர். அப்போது ஆவடியை சேர்ந்த மெல்கீஸ் என்பவரின் மகள் ஆரோக்கிய எமிலியை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
அப்போது வரதட்சணை எல்லாம் தற்போது எதுவும் வேண்டாம். பிறகு செய்தால் போதும் என கூறி கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதியன்று ராபர்ட் ராஜ்- ஆரோக்கிய எமிலி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தின் போது, 10 சவரன் தங்க நகை, 50 ஆயிரம் ரொக்கம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது தம்பதிக்கு 3 வயதில் மகள் உள்ளார்.
இந்நிலையில் வரதட்சணை வேண்டாம் என, திருமணம் செய்த ராபர்ட் ராஜ் தனது மனைவி ஆரோக்கிய எமிலியை தாய் வீட்டிற்கு சென்று வரதட்சணையாக பணம், நகை வாங்கி வா என்று அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் வரதட்சணை கேட்டு கணவன் கொடுமை செய்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு ஆரோக்கிய எமிலி தன் கணவன் வீட்டின் முன், உயிரை மாய்த்துக்கொண்டார்.
தம்பதிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் முடியாததால் அம்பத்தூர் ஆர்.டி.ஓ தலைமையில் விசாரணை நடைபெற்று வந்தது. இதில் உயிரிழந்த ஆரோக்கிய எமிலியின் கடிதம் மற்றும் மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆர்டிஓ விசாரணை நடத்தி கணவன் ராபர்டை கைது செய்து விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் வரதட்சணை கொடுமையில் ஆரோக்கிய எமிலியின் மாமியார் சகாயமேரி, மாமனார் வின்சென்ட் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது உறுதியானதால் இருவரையும் கைது செய்ய அம்பத்தூர் ஆர்.டி.ஓ உத்தரவிட்டார். இதையடுத்து சகாயமேரி, வின்சென்ட் இருவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே உயிரிழந்த ஆரோக்கிய எமிலியின் மரண வாக்குமூலம் வெளியானது. அதில், 'வரதட்சணை கேட்டு கணவன் வீட்டார் என்னை கொடுமை செய்ததால் யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது என, முடிவு எடுத்தேன். எங்கள் குடும்பம் ஏழை குடும்பம். காது கேக்காத அப்பா மற்றும் 4 ஆயிரம் சம்பளத்திற்கு வேலைக்கு போகும் அம்மா உள்ளனர்.
எனது கணவர், மாமியார், மாமனார், கணவரின் அண்ணி ஆகியோர் கொடுமை செய்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் சார். இனி எந்தவொரு பெண்ணுக்கும் இதுபோல் நடக்க கூடாது சார். வரதட்சணையே கேட்கக்கூடாது என்கிற எண்ணம் வரட்டும் சார். எல்லோரையும் உள்ளே தள்ளுங்க சார். இத பாத்து..எல்லா சைக்கோங்களும் திருந்தட்டும்.'' என, உயிரிழந்த ஆரோக்கிய எமிலி கெஞ்சி மரண வாக்குமூலம் அளித்து இருப்பது அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


