குழந்தைகளுக்கு தாய்மொழியின் பெருமைகளை கற்றுத்தருவோம் - ராமதாஸ், அன்புமணி வாழ்த்து..

 
ramadoss

உலக தாய்மொழி தினத்தையொட்டி, தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது வாழ்த்து செய்தியில்,"வங்கமொழியின் உரிமையைக் காப்பதற்கான போராட்டத்தில்  துப்பாக்கிக் குண்டுகளுக்கு  இன்னுயிரை ஈந்த டாக்கா பல்கலை. மாணவர்களின் நினைவாக  உலகத்தாய்மொழி நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. தாய்மொழி உயிரினும் மேலானது என்பதே இந்த நாள் சொல்லும் செய்தி ஆகும்! தமிழ்நாட்டில் தமிழ் அரியணை ஏற்றப்பட வேண்டும் என்பது தான் நமது இலக்கு. அதற்காக எந்த ஈகத்தையும்  செய்யத் தயாராகவே இருக்கிறோம். அன்னைத் தமிழைக் காக்க ‘ தமிழைத் தேடி...’ பயணத்தை இன்று தொடங்கிறேன். தமிழகத் தமிழர்கள்  அனைவரும் ஒன்றுபடுவோம். அன்னை மொழிக்கு மரியாதை செய்வோம்!" என்று குறிப்பிட்டுள்ளார். 

anbumani

இதேபோல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,"இன்று உலகத் தாய்மொழி நாள். தாய்மொழியை மதிக்காதவன், தாயை மதிக்காதவனுக்கு சமம் ஆவான். தமிழர்களாகிய நாம் தமிழ் மொழியிலேயே எழுதுவோம், உரையாடுவோம், பேசுவோம். குழந்தைகளை தமிழிலேயே படிக்க வைத்து, தாய்மொழியின் பெருமைகளைக் கற்றுத் தருவோம். தமிழை வளர்க்க வேண்டிய, காக்க வேண்டிய கடமை அரசுக்கு தான் அதிகம். மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தியவாறு தமிழ்நாட்டு பள்ளிகளில் தமிழைக் கட்டாய பயிற்றுமொழியாக்கவும், கட்டாய பாடமாக்கவும் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற வேண்டும். தமிழ் வாழ்க!" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.