மது அருந்த அனுமதிக்கும் சட்டம் - ராமதாஸ் எச்சரிக்கை!!

 
pmk

மது அருந்த அனுமதிக்கும் சட்டத்தை மட்டும் அவசரம், அவசரமாக  கொண்டு வருவதை அனுமதிக்க முடியாது என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  "திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்கள் போன்ற இடங்களில் மது அருந்துவதற்கு அனுமதி அளிக்கும் முடிவை தமிழக அரசு கடந்த மார்ச் 18-ஆம் தேதி அரசிதழில் வெளியிட்ட போதே அதை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது.அதைத் தொடர்ந்து திருமண அரங்குகளில் மது அருந்த அனுமதிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டது. ஆனாலும், விளையாட்டு அரங்குகள், பன்னாட்டு நிகழ்வுகளிலும்  மது வினியோகம் செய்வதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மக்களைக் காப்பதில் கவனம் செலுத்த வேண்டியது மது வணிகம் செய்வதில் கவனம் செலுத்துவதை ஏற்க முடியாது.தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.  தமிழ்நாட்டு மக்களின் விருப்பமும் அது தான்.  மதுவிலக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை கொள்கை அளவில் ஏற்றுக்கொள்வதாகவும், கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்பதால் தான் வேறு வழியின்றி மது வணிகம் செய்வதாகவும் தமிழக அரசு கூறி வருகிறது.

PMK
இது தான் தமிழக அரசின் உண்மையான நிலைப்பாடு என்றால் மது வணிகத்தை எந்தெந்த வகைகளில் குறுக்க வேண்டுமோ, அந்தந்த வகைகளில் குறுக்க வேண்டும். அதற்கு மாறாக தானியங்கி  மது வழங்கும் எந்திரங்களை அறிமுகம் செய்தல், குடிப்பவர்கள்  விரும்புகிறார்கள் என்பதற்காக  புதுப்புது தரப்பெயரிலான மது வகைகளை அறிமுகம் செய்தல்,  பன்னாட்டு மாநாடுகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், விளையாட்டுப் போட்டிகளின் போதும் மது விற்பனை செய்தல் போன்ற செயல்களில் அரசு ஈடுபடுவது எந்த வகையில் நியாயம்?பன்னாட்டு/தேசிய மாநாடுகளிலும், விளையாட்டு நிகழ்வுகளிலும் பங்கேற்கும் வெளிநாட்டவர்கள் மது அருந்தும் வழக்கம் கொண்டவர்கள் என்பதற்காக நிகழ்விடத்திலேயே நாம் கடை விரிக்கத் தேவையில்லை; அது நமது பண்பாடும் இல்லை என்பதை அரசு உணர வேண்டும்.சென்னையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஏராளமான பன்னாட்டு/தேசிய விளையாட்டுப் போட்டிகளும்,  உலக முதலீட்டாளர் மாநாடு உள்ளிட்ட  பன்னாட்டு நிகழ்வுகளும் நடத்தப்பட்டுள்ளன. அவை எதிலும் மது இருப்பு வைக்கவோ, பரிமாறவோ அனுமதிக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் இனிவரும் காலங்களில் மது வகைகளை பரிமாறுவதற்கு தமிழக அரசு துடிப்பதன் காரணத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருவேளை அடுத்த சில ஆண்டுகளில் உலகத்தமிழ் மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்பட்டால் அதிலும் மது வினியோகிக்கப்படுமா?  அதைத் தான் தமிழர் பண்பாடு  வலியுறுத்துகிறதா?

PMK

சேவை பெறும் உரிமைச் சட்டம்,  லோக் அயுக்தா அமைப்பை வலுப்படுத்துவதற்கான சட்டம், வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் என உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய  சட்டங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை தாக்கல் செய்வதில் ஆர்வம் காட்டாத  தமிழக அரசு,  விளையாட்டுப் போட்டிகளிலும்,  பன்னாட்டு நிகழ்வுகளிலும் மது அருந்த அனுமதிக்கும் சட்டத்தை மட்டும் அவசரம், அவசரமாக  கொண்டு வருவதை அனுமதிக்க முடியாது.இந்த சட்டத் திருத்தத்தை  அறிமுக நிலையில் தொடங்கி அனைத்து நிலைகளிலும் பா.ம.க. கடுமையாக எதிர்க்கும். மக்களின் உணர்வுகளை மதித்து இந்த சட்டத் திருத்தத்தை  தமிழக அரசு கைவிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.