“NDA கூட்டணியில் யார், யார்? 23ம் தேதியன்று பொதுக்கூட்டத்தில் தெரியும்”- எல்.முருகன்
மஹாராஷ்டிரா, திருவனந்தபுரம் உள்ளாட்சி தேர்தலின் பாஜக வெற்றி தமிழகத்தில் எதிரொலிக்கும் என ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பிரதமர் மோடி தமிழகம் வருகை குறித்தான ஏற்பாடுகள் குறித்து ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் பாஜக நிர்வாகிகள் உடன் ஆலோசனை மேற்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், “அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள். வருகின்ற 23 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக நடைபெறக்கூடிய பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள், தயாரிப்புகள் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் உடைய வருகை தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி உறுதி செய்யப்படுகின்ற வருகையாக இருக்கும் எனவும் இந்த கூட்டம் திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கூட்டமாக இருக்கும்.
மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜக மிகப்பெரிய வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.மும்பை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மகாராஷ்டிராவிலும் உள்ளாட்சி தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. தெற்கில் தென் இந்தியாவில் முதல்முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியில் மிகப்பெரிய அளவில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இன்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த தினம் இந்த நாளில் தேசிய ஜனநாயக கூட்டணியின், கட்சியின் தலைவர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 5 வாக்குறுதிகளை வாக்காளர்களுக்கு கொடுத்து இருக்கிறார். அதை வரவேற்கிறோம், நம்முடைய மகாராஷ்ட்ரா, திருவனந்தபுரம் வெற்றி தமிழகத்திலும் தொடரும். 100 நாள் வேலை திட்டத்தை 125 நாளாக மாற்றி சட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வைக்கக்கூடிய அதிமுக தேர்தல் அறிக்கையில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் நாட்கள் 150 என கூறியதை நாங்கள் வரவேற்கிறோம். நிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகளை மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணி கொடுக்கும் திமுக போல ஏமாற்றும் தேர்தல் அறிக்கையை கொடுப்பவர்கள் அல்ல, நாங்கள் எதில் சாத்தியம் உள்ளதோ அந்த வாக்குறுதிகளை தான் கொடுப்போம். வரும் 23 ஆம் தேதி நடைபெறும் பொது கூட்டத்தில் யார் யார் கூட்டணியில் இணைகிறார்கள் என அந்த பொதுக்கூட்டத்தின் மேடையில் பாருங்கள்” என்றார்.


