உள்ளாட்சி இடைத்தேர்தல்- வாக்காளர் பட்டியல் வெளியீடு
உள்ளாட்சி இடைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021ம் ஆண்டு நடத்தப்பட்டது. இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உயிரிழப்பு போன்ற காரணங்களால், 448 பதவியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் நிலையில் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி காலியாக உள்ள வார்டுகள் வாரியாக வாக்காளர் பட்டியல் மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது போன்று வாக்குச்சாவடி தொடர்பான விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் சென்னை மாநகராட்சியில் நான்கு வார்டு கவுன்சிலர்கள் உட்பட, 35 மாவட்டங்களில் உள்ள, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 133 பதவிகள் காலியாக உள்ளன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய, ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில், 315 காலியிடங்கள் உள்ளன.


