தமிழ் போல் உன் புகழ் வாழ்க...! - கனிமொழி, உதயநிதி, செல்வப்பெருந்தகை புகழாரம்..
தமிழகம் முழுவதும் கலைஞரின் 102வது பிறந்தநாள் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் : “தமிழ்ச்சமூகத்தின் இதயத்துடிப்பாய் இன்றும் வாழும் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடி அவர் புகழ் போற்றுவோம், 2026-லும் வென்று கழக ஆட்சி தொடர உறுதியேற்போம்!
கோடானு கோடி கருப்பு - சிவப்பு தொண்டர்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்திட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102-ஆவது பிறந்தநாள் இன்று. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்நாளை செம்மொழிநாள் என அறிவித்துள்ளார்கள்.
கும்மிடிப்பூண்டி முதல் குமரி வரை, கலைஞர் அவர்கள் வகுத்தச் சட்டங்களும், தீட்டிய திட்டங்களும் , உருவாக்கிய கட்டமைப்புகளும் தான் இன்றைய தமிழ்நாட்டின் அடையாளம்.

தமிழ்நாட்டில் கலைஞர் அவர்களின் சாதனைச் சுவடுகள் பதிந்த இடங்களில் எல்லாம் 102 நிகழ்ச்சிகளை கழகம் இன்று நடத்துகிறது.
இன எதிரிகளை தமிழ்நாட்டுக்கு வெளியே நிறுத்த - துரோகிகளை வீழ்த்த, கலைஞர் அவர்கள் கற்றுத் தந்த 'அரசியல் வியூகம்' தான் பாசிசத்தையும் - அடிமைகளையும் பதற வைக்கிறது.
மண்-மொழி-மானம் காத்திட மதுரை பொதுக்குழுவில் நம் கழகத்தலைவர் அறிவித்த, ‘ஓரணியில் தமிழ்நாடு' எனும் உறுப்பினர் சேர்க்கையை திறம்பட நிறைவேற்றுவதே கலைஞர் அவர்களுக்கு உடன்பிறப்புகள் நாம் அளிக்கும் உன்னதமான பிறந்த நாள் பரிசு.
2026 சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் அதிகமான இடங்களில் வெல்ல உறுதியேற்போம்!
கலைஞரின் கரம்பற்றி பேரலையாய் எழுவோம் - தமிழ்நாடு காப்போம்!!” என்று பதிவிட்டுள்ளார்.
கலைஞருடன் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள திமுக எம்.பி., கனிமொழி: “அப்பா! ஆசான்! தலைவர்! இதில் எந்த வார்த்தையை முதலில் சொல்லி அழைப்பது. பணிவும், இரக்கமும், அன்பும், புரட்சியும், தமிழும், அறமும், மனிதமும், அரசியலும் உங்களிடம் இருந்தே கற்றுக் கொண்டோம். நீங்கள் ஏற்றிய திராவிடத் தீயே எப்போதும் நெஞ்சினில் கனன்று எரிகிறது. தமிழ் போல் வாழ்க உன் புகழ்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை: “ஜனநாயகம், சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை உள்ளிட்ட அனைத்து முற்போக்கு கொள்கைகளாலும் தனது வாழ்நாள் முழுவதும் போராடி, ஆட்சியில் பொறுப்பேற்றிருந்த நாள்களில் உன்னத நோக்கங்கங்களை நிலைநாட்டிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு இன்று அவரின் 102வது பிறந்தநாள்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் நம்மை விட்டு பிரிந்தாலும், அவர் கொண்ட கொள்கையாலும், சரித்திர சாதனைகளாலும், கலாச்சார நினைவுகளோடும் என்றென்றும் நம்மோடு வாழ்பவர்.
தமிழ்நாட்டில் அவர் ஆட்சியில் இருந்த போது, எந்தத் திட்டம் செயல்படுத்தினாலும் அதன் நோக்கம் சமூகநீதியாகவே இருக்கும். சமூகநீதிச் சிந்தனையையொட்டிய அவருடைய திட்டங்கள் அனைத்தும் வரலாற்று சாதனைகள் ஆகும். சமூகநீதிக்காகவும், சாமான்யர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காகவும் அவர் ஆற்றிய அரும்பணிகள் அனைத்தும் தமிழர் உள்ளவரை மறவாமல் காலத்தால் போற்றப்படும். பாராட்டப்படும்.
வாழ்நாள்முழுவதும் தமிழ்மொழி வாழ, தமிழர்கள் வாழ, தமிழ்நாடு வாழ, தமிழ் கலாச்சாரம் வாழ வாழ்ந்த முத்தமிழறிஞரின் பிறந்தநாள் விழாவினை தமிழ்செம்மொழி நாளாக போற்றிப் புகழ்பாடுவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்..


