‘தமிழைத் தேடி’ விழிப்புணர்வு பிரச்சாரம் : ஜி.கே.மணி தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்..

 
ஜி.கே.மணி

தமிழைத்தேடி விழிப்புணர்வு பிரச்சாரத்தை  பாமக நிறுவனர் ராமதாஸ் தொடங்கி வைப்பார் என அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.  

பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ‘தமிழைத்தேடி’ என்கிற விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக வருகிற 23-ந் தேதி புதுவை வருகிறார். இதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், கௌரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில்  கவுண்டம்பாளையம் வன்னியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.  
 

 ராமதாஸ்..
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, “தமிழ் மொழி இன்று தமிழ்நாட்டின் அனைத்து துறைகள் மற்றும் தளங்களிலும் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் தமிழ் ஆட்சி செய்ய வேண்டும். தொழில் நிறுவனங்களின் பெயர் பலகையை தமிழில் வைக்கவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான மருத்துவர் ராமதாஸ் வரும் 21ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழைத் தேடி பயணம் என்ற பரப்புரை பயணத்தை தொடங்குகிறார். 28ம் தேதி வரை 8 நாட்கள் மதுராந்தகம், திண்டிவனம், கடலூர், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி என நடைபெறும் இந்த பரப்புரை பயணம் மதுரையில் நிறைவு பெறுகிறது.

‘தமிழைத் தேடி’  விழிப்புணர்வு பிரச்சாரம் : ஜி.கே.மணி தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்..

தமிழை பாதுகாக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பரப்புரை பயணம் நடைபெற உள்ளது. புதுச்சேரி மாநில சார்பில் கம்பன் கலை அரங்கில் வரும் 23ம் தேதி மிகப்பெரிய அளவில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேலும் அரசியல் கலப்பு இல்லாமல் இதனை நடத்த திட்டமிட்டுள்ளதால் எங்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடிகளை கட்டக் கூடாது என கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இந்த தமிழைத் தேடி பரப்புரை பயணத்தில் பங்கேற்க உள்ளனர்” என்று தெரிவித்தார்.