ஒவ்வொரு நாளும் குடும்பத்திற்கு ஊதிய இழப்பு.. சாம்சங் தொழிலாளர்கள் தயவு செய்து பணிக்கு திரும்புங்க - டி.ஆர்.பி.ராஜா
"சாம்சங் தொழிலாளர்கள் தயவு செய்து பணிக்கு திரும்ப வேண்டும்.. ஒவ்வொரு நாளும் அந்த குடும்பத்திற்கு ஊதிய இழப்பு ஏற்படுகிறது. இது எந்தவிதத்தில் நியாயம்..?" என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் டி.ஆர்.பி. ராஜா இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, “சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக தீர்வு காண்பதற்காக தமிழக முதலமைச்சர் 3 அமைச்சர்கள் கொன்ற குழுவை அமைத்துள்ளார். சாம்சங் தொழிலாளர்களின் அனைத்து முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டது.

CITU சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டு விட்டது. CITU தங்கத்தை பதிவு செய்வது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது எனவே தற்போது அந்த விவகாரத்தில் எங்களால் முடிவெடுக்க முடியாது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடும் ஒவ்வொரு நாளும் சம்பளம் பிடித்தும் செய்யப்படுகிறது என்பதை உணர்ந்து அவர்கள் உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும்.
சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் நல்ல ஊதியம் வழங்கப்படுகிறது. தற்போது 5 பேருந்துகள் மட்டுமே ஏசி பேருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில் 108 பேருந்துகளையும் ஏசி பேருந்ததாக மாற்றி தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளனர். மேலும் சுத்தமான உணவு மற்றும் சுகாதாரமான கழிவறை உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டுள்ளது. மேலும் எந்த கோரிக்கை இருந்தாலும் சொல்லுங்கள் நாங்கள் நிறைவேற்றித் தருகிறோம் என SAMSUNG நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு மேலும் எதற்காக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்பது எங்களுக்கு புரியவில்லை. இதற்கு மேலும் இந்த போராட்டம் நீட்டிப்பது என்பது சரியாக இருக்காது. இதற்கு மேலும் சாம்சங் தொழிலாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டால் எதிர்தரப்பினர் இதனை வேறு வகையாக திசை திருப்ப வாய்ப்பு உள்ளது. இதனால் எதிர் காலத்தில் மற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பும் பாதிக்கக்கூடிய சூழல் ஏற்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் வேலைக்கு திரும்ப வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.


