காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

 
weather weather

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியது. இது அதற்கடுத்த தினங்களில் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இந்த நிலையில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்திற்குள் மத்திய மேற்கு வங்ககடல்  பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக  இன்று வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.