"முதல்வரை பாராட்டாவிட்டாலும் விமர்சிக்காதீர்" - 'சாட்டை' துரைமுருகனுக்கு நீதிபதி சாட்டையடி!

 
சாட்டை துரைமுருகன்

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை உடைத்து கற்கள் உள்ளிட்டவற்றை சட்ட விரோதமாகக் கேரள மாநிலத்துக்கு கடத்துவதைக் கண்டித்து, அக்டோபர் 10ஆம் தேதி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தலைமையில் தக்கலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பேசிய "சாட்டை" துரைமுருகன் முதலமைச்சர் ஸ்டாலினின் பிறப்பு குறித்து மிகவும் இழிவாகப் பேசினார். மேலும் ராஜீவ்காந்திக்கு நடந்தது நியாபகம் இருக்கட்டும் என்பதை சுட்டிக்காட்டி மறைமுக மிரட்டல் விடுத்தார். 

மிரட்டல் வழக்கு… சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன்!

இதையடுத்து திமுகவினர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்குகளில் துரைமுருகன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்கள் தாக்கல் செய்தார். நீதிபதி முரளிசங்கர் இரு வழக்குகளில் துரைமுருகனுக்கு ஜாமின் வழங்கினார். வழக்கு பதிவு செய்யப்பட்ட காவல்நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று இதுபோன்ற சம்பவங்களில் மனுதாரர் மீண்டும் ஈடுபட்டால் உடனடியாக ஜாமீனை ரத்து செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தார்.

வேலை வாய்ப்பில் உள்ளூர் மக்கள் புறக்கணிக்கப்படுவதற்கு தமிழக அரசே பொறுப்பு -  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்

இச்சூழலில் அவருக்கு வழங்கிய ஜாமினை ரத்துசெய்யக் கோரி தமிழ்நாடு அரசு  சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த அவர், "ஒரு முதலமைச்சரால் எவ்வளவு முடியுமோ அதை விட அதிகமாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். அவரைப் பாராட்டாவிட்டாலும் சரி இதுபோன்ற செயல்களைத் தவிர்க்கலாம். விமர்சிப்பதையும் தவிர்க்கலாம்” என்றார். முதலமைச்சர் ஸ்டாலினை நீதிபதியே பாராட்டிவிட்டார் என்பதால் கட்சி தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.